கீழடியில் மேலும் உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடியில் மேலும் இரு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கீழடியில் ஜூன் 13ல் இருந்து அகழாய்வு பணி நடந்து வருகிறது.ஏற்கனவே ஏழு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது இரண்டு உறைகிணறுகள் கண்டறியப் பட்டுள்ளன. மூன்று அடுக்கு கொண்ட உறைகிணறு சிதிலமடைந்துள்ள நிலையில் காணப் படுகிறது. மற்றொரு உறைகிணற்றின் ஒரு உறை மட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மற்ற உறை கிணற்றை விட இந்த உறைகிணற்றின் வெளிப்புறம் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
மத்திய தொல்லியல் துறை மூலம் நடந்த அகழாய்வில் 3 உறைகிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக தொல்லியல் துறையும் 3 உறைகிணறுகளை கண்டறிந்துள்ளது. உறை கிணறுகள் அனைத்தும் ஆற்றுப்படுகையில் அமைத்திருக்க வாய்ப்புண்டு, கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வற்றிய நிலையில் குடிநீர் தேவைக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் உறைகிணறு அமைத்திருக்க வாய்ப்புண்டு, நீண்ட செங்கல் கட்டுமானங்கள் தண்ணீர் செல் லும் வாய்க்கால் போல அமைந்துள்ளதால் நீர் மேலாண்மைக்கு 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
மேலும் வெள்ளம், புயல் போன்ற காரணங்களால் ஆறுகள் திசை மாறியிருக்க வாய்ப்புண்டு, அதுபோல வைகை ஆறும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கீழடி பகுதி வழியாக சென்றிருக் கலாம், திசை மாறியதில் தற்போதைய பாதை உருவாகி இருக்கலாம், தொடர்ச்சியாக உறைகிணறுகள் கிடைத்திருப்பதால் வைகை ஆறு இப்பகுதி வழியாக சென்றிருக்க வாய்ப் புண்டு என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொடர்ச்சியான ஆய்வு மூலம் தான் உறுதியாக சொல்ல முடியும் என தெரிவித்தனர்.