சபரிமலை ஆராட்டு உற்சவத்திற்கு மாநில அமைச்சரின் யானை தேர்வு!
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் பங்குனி உத்திர உற்சவத்தை ஒட்டி, பம்பையில் நடைபெற உள்ள ஆராட்டு நிகழ்ச்சிக்கு, உற்சவரை சுமந்து வரும் வாய்ப்பு, இம்முறை மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ்குமாரின் யானைக்கு கிடைத்துள்ளது. கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது பங்குனி உத்திர உற்சவம் நடந்து வருகிறது. வரும் 5ம் தேதி பம்பையில் ஆராட்டு (தீர்த்தவாரி) நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலையில் இருந்து உற்சவ மூர்த்தி, பம்பைக்கு யானை மீது எழுந்தருளு வார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான யானைகளை பயன்படுத்துவது தான் வழக்கம். அதற்காக தேர்வு செய்யப்பட்ட தேவஸ்வம் போர்டு யானைக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால்,வேறு யானையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, மாநில வனத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் பராமரித்து வரும் கீழூட்டு விசுவநாதன் என்ற யானை தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவ கொடியேற்ற நிகழ்ச்சிக்கு முன்பே, இந்த யானை சபரிமலைக்கு வரவழைக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறது.