வடபழனி ஆண்டவர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஹோமம்
சென்னை : வடபழனி ஆண்டவர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது, ஆண்டவர் கோவில். அங்கு, முருகப் பெருமான், பாதரட்சைகளுடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இக்கோவிலில், செவ்வாய் பகவானுக்கு, தனி சன்னிதி உள்ளது.பல முருகன் கோவில்களில் இல்லாத, ஆஞ்சநேயர் சன்னிதியும், இங்கு உண்டு. ஐந்து கால பூஜைகள் நடத்தப்படும் இக்கோவிலில், இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம், பூஜைகள் நடத்தப்படுகின்றன.விநாயகர் சதுர்த்தியன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
இதில், பெயர், நட்சத்திரத்துடன் முன்பதிவு செய்து, பக்தர்கள் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் விக்ரஹம், கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படும். சிறப்பு ஹோமத்தில் பங்கேற்க, 150 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறைந்தளவு இடங்கள் உள்ளதால், முன்பதிவில் முந்துவோருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.அன்று மாலை, 6:00 மணிக்கு, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானும், ’மாண்டலின்’ ஸ்ரீனிவாசனின் சகோதரருமான, ’மாண்டலின்’ ராஜேஷ் குழுவினரின், இன்னிசை கச்சேரி நடக்கிறது.
இரவு, 7:30 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார், எல்.ஆதிமூலம், துணை கமிஷனர், கே.சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.