சிவன்மலை கோவில் பெட்டியில் ஐம்பொன் மகாலட்சுமி சிலை
திருப்பூர்:சிவன்மலை கோவிலில், ஆண்டவர் உத்தரவு பொருள் மாற்றப்பட்டு, ஐம்பொன்னால் ஆன மகாலட்சுமி சிலை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில் தோன்றி, சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தும் பொருள், கோவிலில் மூலவர் முன் அனுமதி பெற்று, இப்பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும்.
இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, பக்தர்கள் நம்பிக்கை. இந்நிலையில், திருச்செந்துாரை சேர்ந்த மகாலட்சுமி, 46, என்பவரது கனவில் பெற்ற உத்தரவுப்படி, ஐம்பொன்னால் செய்த மகாலட்சுமி சிலை நேற்று 30ல் இப்பெட்டியில் வைத்து பூஜை நடத்தப்பட்டது.
இதன் மூலம், ’மக்கள் மத்தியில், பொன், பொருள் சேமிப்பு அதிகரிக்கும்; மகாலட்சுமியின் செல்வத்தின் அடையாளம் என்பதால், பொருளாதாரம் மேம்படும்; சுபகாரியங்கள் அதிகளவில் நடக்கும்’ என சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்.