உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன்

பொறுப்பினை ஒருவரிடம் கொடுத்த பின் நிம்மதியாக வாழப் பழக வேண்டும். ஆனால் ’உலகையே நாம் தான் இயக்குகிறோம்’ என்ற எண்ணத்தில் பெயருக்கு ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்தாலும்  எந்நேரமும் அதைச் சுமந்தபடி இருக்கிறோம்.

ஒரு நல்ல தலைவன் என்பவன் பொறுப்பை ஒப்படைத்த பின், மேற்பார்வை செய்யலாமே தவிர பணியில் அடிக்கடி தலையிடுவதோ, குறுக்கிடவோ கூடாது. ’நான் எல்லாப் பொறுப்புக்களையும் அடுத்த தலைமுறையிடம் விட்டு விட்டேன்’ என வாய் சொல்லுமே தவிர யாரையும் பணி செய்ய விடுவதில்லை. காரணம் நம்பிக்கையின்மையே.  

அவர்களால் முடியுமா? நானாக இருந்ததால் தான் இதைச் செய்ய முடிந்தது என்பதெல்லாம் வெறும் புலம்பல்.  நாம் அனைவரும் கடவுளின் கருவிகள்.  நம்மை விட அவர்களை இன்னும் நன்றாக கடவுள் இயக்குவார் தானே.
ரயிலில் ஏறிய பின்பும், சுமையைத் தலையில் சுமந்தபடி இருப்பது மடத்தனம் என்பார் பகவான் ராமகிருஷ்ணர். நம்பிக்கையோடு நம்மை கடவுளிடம் ஒப்படைப்பது என்பது கடினமான விஷயம். பகவத் கீதையில் உபதேசித்த பகவான் கிருஷ்ணர் நிறைவாக, ’எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னைச் சரணடைவாயாக’  என்கிறார்.

பகவான் கண்ணனையே கண்ணம்மாவாக பாவித்த மகாகவி பாரதியார், அவளைக் குலதெய்வமாக்கி ’நின்னைச் சரணடைந்தேன்’ என்று பாடுகிறார். “நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே” என்பார் மாணிக்க வாசகர். “நன்றே வருகினும், தீதே விளைகினும் நானறிவது ஒன்றேயுமில்லை” என்கிறார் அபிராமிபட்டர்.

மகாகவி பாரதியாரும் இதை உறுதிப் படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் உற்சாகமாக நாம் எழ வேண்டும். எழுந்தவுடன், ’இந்த நாள் வெற்றி நாள்’ என சொல்ல வேண்டும். அப்போதே நமக்குள் உற்சாகம் கிளம்பும்.

சமணத்திலிருந்து மீண்டு(ம்) சைவத்திற்கு வந்தார் திருநாவுக்கரசர். அவருக்கு வயதோ 82.  சமணத்தில் ஊறிய பல்லவ மன்னன்

மகேந்திர வர்மனால் துன்பங்களுக்கு ஆளானார். ஆட்சி, அதிகாரம், ஆணவம் இருப்பவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை. ஆனாலும் நாவுக்கரசர் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. கல்லிலே கட்டிக் கடலிலே போட்டான். யானையை விட்டு இடறச் செய்தான். சுண்ணாம்பு நீற்றறையில் தள்ளினான். ஆனாலும் மன உறுதியுடன் ”இன்பமே எந்நாளும் துன்பமில்லை”  என உரக்கப் பாடினார். அவரது நிலையை எண்ணினால் நம் துன்பம் எல்லாம் கடுகளவு கூட இருக்காது.
எப்போதும் நேர்மறையாக சொல்லிப் பழகிட வேண்டும். துன்பம் இனியில்லை சோர்வு இல்லை, தோற்பில்லை என்கிறார் பாரதியார். அதற்கான
காரணம் ஆழமான நம்பிக்கை தான். அதனால் தான் நாடு சுதந்திரம் அடைவதற்கு 30 ஆண்டுக்கு முன்பே “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” அவரால் பாட முடிந்தது.

எந்தச் சூழலிலும் வெற்றி பெறுவோம். தோல்வி என்பது தற்காலிகம் தான் என்பதை எடுத்துச் சொல்லி, வாழ்வை எதிர்கொள்ள அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லித்தர வேண்டும்.

இந்த சிந்தனை வந்தால் அன்பு வளரும். அனைவரையும் பார்த்து ஆனந்தமாக புன்னகைக்கலாம். பிறருக்கு உதவுவதன் மூலம் அறம் பெருகும். எதிர்பார்ப்பு இல்லாமல் நன்மை செய்யும் குணம் ஏற்படும். எனவே தான் அன்னையே! நல்லது தீயது நாங்கள் அறிய மாட்டோம். நல்லது நாட்டுக; அல்லதை ஓட்டுக என்று அவர் பிரார்த்திக்கிறார்.

துன்பமினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்புநெறியில் அறங்கள் வளர்த்திட   
நின்னைச் சரணடைந்தேன்...
நல்லது:  தீயது   நாமறியோ மன்னை!
நல்லது  நாட்டுக!   தீமையை யோட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !