கரூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
கரூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று 2ம் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா, இன்று நாடு முழுவதும் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. கரூர் வெள்ளியணை, பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், பா.ஜ., இந்து முன்னணி, வி.எச்.பி., மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று 2ம் தேதி அதிகாலை முதல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சின்ன ஆண்டாங் கோவில் அண்ணா சாலையில் உள்ள, கற்பக விநாயகர் கோவிலில், 21வது விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு வண்ண அலங்கார விநாயகர் சிலை வைத்து, சிறப்பு பூஜை நடந்தது.
* லாலாப்பேட்டை விட்டுகட்டியில், சிறுவர்கள், சிறிய விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேட்டுப்பட்டியில், மயில் வாகனத்தில் வண்ண விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
* குளித்தலை வருவாய் கோட்டத்தில், 105 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று 2ம் தேதி காலை, விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் பூஜை செய்து, பொதுமக்களுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை பிரசாதம் வழங்கினர்.
* மேட்டுமருதூர் மல்லாண்டவர்கோவிலில், பொது மக்கள் சார்பில், எட்டு அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு, பாசன வாய்க்காலில், போலீஸ் பாதுகாப்புடன், 89 சிலைகள் நாளை 3ம் தேதி கரைக்கப்படுகின்றன.