ஓசூர், தேன்கனிக்கோட்டையில் 1,000 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில், ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியில், அதிகளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். நேற்று 2ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், ஓசூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பாகலூர், பேரிகை, சூளகிரி, ஓசூர் டவுன், ஹட்கோ, சிப்காட், மத்திகிரி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் வரை மட்டும், 574 சிலைகளை வைக்க இந்து அமைப்புகள் சார்பில் அனுமதி பெறப்பட்டுள்ளன.
அதேபோல், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள தளி, அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில், 380 விநாயகர் சிலை கள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், போலீசார் கணக்கின்படி, நேற்று முன்தினம் செப்., 1ல் இரவு வரை மட்டும், 954 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. நேற்று 2ம் தேதி மாலை வரை, பலர் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாடவும், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கவும், ஓசூரில் நேற்று 2ம் தேதி, டி.எஸ்.பி., மீனாட்சி தலைமையில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர். எம்.ஜி.,ரோட்டில் துவங்கிய அணிவகுப்பு, முக்கிய வீதிகளில் வழியாக சென்றது.