உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழபாடியில் நந்தி திருமணம் கோலாகலம்

திருமழபாடியில் நந்தி திருமணம் கோலாகலம்

அரியலூர்: திருமழபாடியில் நந்தியம்பெருமான் திருமண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே, திருமழபாடி கொள்ளிடக்கரையில், சுந்தராம்பிகை உடனுமர் வைத்தியநாத ஸ்வாமி கோயிலில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்ட மூவராலும் தேவாரம் பாடப்பெ ற்ற இத்தலம், நான்கு திருமால், இந்திரன் மற்றும் நான்கு வேதங்கள் வந்து வழிபட் ட பாரம்பரிய பெருமை மிக்க தலமாகும். உலகெங்கும் எழுந்தருளும் சிவபெருமானுக்கு காவலனாகவும் தோழனாகவும் விளங்கும், நந்தியம்பெருமானுக்கு, வரலாற்று சிறப்பு இத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி புனர்பூசம் நாளில் திருமண உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி சிலாதல முனிவரின் தவப்புதல்வராக அவதரித்த நந்தியம்பெருமானுக்கும், வசிட்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயஸாம்பிகா தேவிக்கும், நேற்று முன்தினம் இரவு பக்தி சிரத்தையுடன் திருமண உற்சவம் நடந்தது. வேறெங்கும் காணமுடியாத வகையில் மனிதகுல வழக்கப்படி சராசரி சீர்வரிசைகளுடன் நடந்த இத்திருமண உற்சவத்துக்காக, திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனமர் ஐயாரப்பர், மற்றும் திருமழபாடி சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத ஸ்வாமி ஆகியோர் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் நடத்திய இத்திருமண உற்சவத்தின் நிறைவாக, கோயில் ஸ்தானிகர் வீட்டு பெண் ஜானகி, மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு திருமண உற்சவத்தை நிறைவு செய்தார். அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என கோஷமிட்டனர். பக்தி சிரத்தையுடன் நடந்தேறிய இத்திருமண உற்சவத்தின் போது, தர்மபுரம் ஆதீனத்துக்குட்பட்ட கட்டளை தம்பிரான் குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள், அரியலூர் ஆர்.டி.ஓ., பூங்கொடி, எம்.எல்.ஏ., துரை மணிவேல், கோயிலின் நிர்வாக அலுவலர் மணி உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். திருமண உற்சவத்தை முன்னிட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !