உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை விசர்ஜனம்: நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சிலை விசர்ஜனம்: நீர்நிலைகளில் கரைப்பு

பொள்ளாச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, விநாயகர் சிலைகள் அம்பராம்பாளையம் ஆற்றில் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்கு பின், நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 40 சிலைகள் ஊர்வலமாக பொள்ளாச்சி பல்லடம் ரோட்டிற்கு வந்தன. அனைத்து சிலைகளும் ஒருங்கிணைந்ததும், அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. நிகழ்ச்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

* ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு சுற்றுப்பகுதகளில், இந்து அமைப்பினர் மற்றும் மக்கள் சார்பில், 210 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம், வி.எச்.பி., சார்பில், 27 சிலைகள் உப்பாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.நேற்று, இந்து முன்னணி, உலக நல வேள்விக்குழு மற்றும் மக்கள் சார்பில், 94 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஆனைமலை சுற்றுப்பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்தோர், உப்பாற்றிலும், கோட்டூர் பகுதியினர் மயிலாடுதுறையில் ஆழியாறு ஆற்றிலும், ஆழியாறு சுற்றுப்பகுதியினர் ஆழியாறு ஆற்றிலும், விசர்ஜனம் செய்தனர்.

* கிணத்துக்கடவு பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட, 48 சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்பராம்பாளையம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.கிணத்துக்கடவு, சொலவம்பாளயைம், சொக்கனுார், கொண்டம்பட்டி, தேவராயபுரம், நல்லிகவுண்டன்பாளையம், கொண்டம்பட்டி, பட்டணம், வடபுதுார், சிக்கலாம்பாளையம் உட்பட பல கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 36 விநாயகர் சிலைகளும், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மூன்றும், பொதுமக்கள் சார்பில் 11 உட்பட, 50 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 48 விநாயகர் சிலைகள் கரியகாளியம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன.விநாயகர் ஊர்வலத்தை, கோவை, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கி வைத்தார். கூட்டத்தில், மாநில செயலாளர் அண்ணாதுரை, இந்து ஆலய பாதுகாப்பு குழு சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.அதன்பின், ஊர்வலமாக கிளம்பி, பொன்மலை வேலாயுதசாமி மலை கோவிலை வலம் வந்து, அம்பராம்பாளையம் ஆற்றுக்கு கொண்டு சென்று சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. தேவராயபுரம், நல்லிகவுண்டன் பாளையம் கிராமத்தில் இரண்டு விநாயகர் சிலைகள் இன்று சூலக்கல் வழியாக வடக்கிபாளையம் சென்று, அங்கிருந்து அம்பராம்பளையம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !