சிதம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லுார் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணி விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தெற்கு வெங்காநல்லுாரில் உள்ள கோயில் ஆவணி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியா திருக்கல்யாணம் நேற்று நடந்தது.காலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய வழிபாடுகள், கோயில் கொடி மரத்திற்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த மூலவர் சிலைகளுக்கு எதிரே சிறப்பு யாகம் நடைபெற்றது.யாகத்தை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதன்பின் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ராஜபாளையம், நக்கனேரி, சிதம்பராபுரம், பட்டியூர், கொல்லங் கொண்டான், தளவாய்புரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை திருக்கோயில் விழாக்கமிட்டி சார்பில் பக்தர்கள் செய்திருந்தனர்.