உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் அருகே 8ம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே 8ம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

 உத்திரமேரூர்:காவனுார் புதுச்சேரியில், எட்டாம் நுாற்றாண்டை சார்ந்த, பல்லவர் கால கொற்றவை சிலை மற்றும் அய்யனார் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் அடுத்த, காவனுார் புதுச்சேரியில், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர்  பாலாஜி மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை, ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்சியா காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

8ம் நுாற்றாண்டு: அப்போது, அப்பகுதி பொன்னியம்மன் கோவில் அருகே, எட்டாம் நுாற்றாண்டை சார்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை உள்ளதை கண்டறிந்தனர். 4 அடி உயரமும், 2 அடி அகலமும் 8 கரங்களையும் கொண்ட இக்கொற்றவை சிலையின் இடதுபுற  காலின் அருகே, தன் தலையை தானே பலி கொடுக்கும் நவகண்ட வீரனின் சிற்பம் உள்ளது.தலையில், மகுடம், காதில் குழையும், கழுத்தில் அணிகலன், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, காலில் சிலம்பு அணிந்து எருமை தலை மீது நின்று கம்பீரமாக கொற்றவை  தெய்வம் அருள்பாலிக்கிறது. இக்கொற்றவை சிலை, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என, அறியப்பட்டது.

அய்யனார் சிலை: இதே போன்று, அப்பகுதி நடுநிலைப் பள்ளி யின் விளையாட்டு மைதானம் எதிரே, புளிய மரத்தடியில், 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய, பல்லவர் கால அய்யனார் சிலை ஒன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது.அமர்ந்த நிலையில் உள்ள இந்த அய்யனார் சிலையின் வலது புறத்தில் ஒரு பெண், இடது புறம் ஒரு பெண் என, இரு பெண்கள் சாமரம் ஏந்தி அருள்பாலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !