ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே சந்திர புஷ்கரணி தீர்த்தக்குளம் அமைப்பு
மானாமதுரை:மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் சுவாமி கோயிலுக்கு சந்திர புஷ்கரணி தீர்த்தக்குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ., நாகராஜன் தெரிவித்தார்.
மானாமதுரையில் வைகை நதி யோரம் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் சுவாமி கோயில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்டதாகும்.இந்த கோயிலில் சோமநாதர் சுவாமி சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு எதிரே வைகையாற்றை ஒட்டி இருந்த இந்த தீர்த்தக்குளம் காலப்போக்கில் மறைந்து தற்போது சிறிய கிணறாக இருப்பதால் மீண்டும் பராமரித்து தீர்த்தக்குளமாக மாற்ற வேண்டும் என்று கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் எம்.எல்.ஏ.,நாகராஜனிடம் கோரிக்கை விடுத்தனர். எம்.எல்.ஏ.,நாகராஜன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா ,செயல் அலுவலர் குமரேசன் மற்றும் பணியாளர்கள் சந்திர புஷ்கரணி தீர்த்தக்குளம் இருந்த இடத்தையும் தற்போது இந்த தீர்த்தக்குளம் கிணறாக இருப்பதையும் பார்வையிட்டு தீர்த்தக்குளம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.அவர்களிடம் கோயில் சிவாச்சாரியார்கள் தெய்வசிகாமணிப்பட்டர், ராஜேஷ்பட்டர் சந்திர புஷ்கரணி தீர்த்த குளத்தின் சிறப்புகளையும் வரைபடங்களைக் காட்டினர். எம்.எல்.ஏ., நாகராஜன் தீர்த்த குளம் அமைக்க பல்வேறு துறைகளிடம் தடையில்லாச்சான்று பெற்று விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.