மகாளய பட்சம் தோன்றிய கதை!
மகாபாரதப் போரில் கர்ணன் மாண்ட பின் வானுலகம் சென்றான். அப்போது அவன் உண்பதற்குப் பொன்னையும், ஆபரணங்களையும் அளித்தார்கள். கர்ணன் உண்பதற்கு உணவைக் கேட்டான். அதற்கு எமதர்மன் பூலோகத்தில் இருந்த போது ஏராளமான தானங்களை அளித்த நீ உன் மூதாதையர்களுக்காக அன்னதானமோ சிரார்த்தமோ செய்யவில்லை. அதற்குப் பரிகாரமாக நீ புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்களில் பூலோகம் சென்று முன்னோர்களுக்காக அன்னதானமும், சிரார்த்தமும் செய்து விட்டு வந்தால் இங்கு உனக்கு உணவு கிடைக்கும் என்றார். கர்ணனும் அதன்படி பூலோகம் வந்து அன்னதானமும், சிரார்த்தமும் செய்ததாகவும், அந்த நாட்களே மகாளய பட்ச நாட்கள் எனவும் புராணக் கதை கூறுகிறது. எனவே மாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் இருந்தால், லாபம் நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைகளுக்கும் சேர்த்து தான். மகாளய பட்சத் தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம். இவற்றைத் தவிர ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.