உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிக்ககம் சாமுண்டி கோயில் விழா லட்சக்கணக்கானோர் பொங்கல் வழிபாடு!

கரிக்ககம் சாமுண்டி கோயில் விழா லட்சக்கணக்கானோர் பொங்கல் வழிபாடு!

திருவனந்தபுரம் : கரிக்ககம் சாமுண்டி கோயில் திருவிழாவில் பிரசித்திபெற்ற பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாவட்டம் கரிக்ககம் கோயில் பிரசித்தி பெற்றது. சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கி ஏழு நாட்கள் நடந்தது. விழா நாட்களில் குருபூஜை, பகவதிசேவை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை, தீபாராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஐந்து மற்றும் ஆறாம் நாட்களில் தங்கத்தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. தங்கத்தேரை விரதம் இருந்த சிறுவர்கள் இழுத்தனர். தேர் சென்ற பாதையில் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா நிறைவு நாளான நேற்று(3ம் தேதி) பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நடந்தது. காலை 10.30 மணிக்கு கோயில் சன்னதியில் இருந்து தீபம் கொண்டு வந்து பூஜை செய்யப்பட்டது. கோயில் தந்திரி நாராயணன் அனுஜன் நம்பூதிரிபாடு தலைமையில் மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி கோயில் முன் அலங்கரிக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் முதல் தீபம் ஏற்றினார். உடனே மேளதாளம் முழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேரள போக்குவரத்துதுறை அமைச்சர் சிவகுமார், டிரஸ்ட் நிர்வாகிகள் சேர்மன் ராமசந்திரன்நாயர், தலைவர் முரளீதரன்நாயர், உதவித்தலைவர் பிரதாபசந்திரன், பொருளாளர் பார்க்கவன்நாயர், செயலாளர் அனில்குமார், இணை செயலாளர் கோபகுமார் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொங்கலிட தயாராக இருந்த பெண்கள் அடுப்பில் தீபம் ஏற்றினர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டனர். கோயில் முன் பகுதியில் உள்ள மைதானம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்கள், வீடுகளின் சுற்றுப்பகுதி, ரோடோரங்களில் பெண்கள் பொங்கலிட்டனர்.விழாவை முன்னிட்டு கோட்டையம் முதல் பாறசாலை வரை கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. கோயில் செல்ல வசதியாக வேளி ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நேற்று நின்று சென்றது. குடிநீர், சுகாதார வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.பக்தர்கள் சார்பில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரி மற்றும் அமைப்புகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் பெண்கள் பொங்கலிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !