காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2290 days ago
பல்லடம்: காரணப்பெருமாள் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.
பல்லடம் பனப்பாளையத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், கோவில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. திருமஞ்சனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சாற்றுமுறை வேத பாராயணம், சுதர்ஸன ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றன.காலை, 11.00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. புடவை, வேஷ்டி, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ளிட்ட சீர்வரிசைகளுடன், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் திருக்கல்யாண வைபவத்தில் காட்சியளிக்க, மூலவர் ஸ்ரீகாரணப்பெருமாள் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.