உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்: இன்று மகாவீரர் ஜெயந்தி!

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்: இன்று மகாவீரர் ஜெயந்தி!

பிறவிகளிலேயே மிக உயர்ந்தது மனிதப்பிறவி என்கிறார்கள் ஒரு சாரார். சே...இதை விட ஈனப்பிறவி இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை என்கிறார்கள் இன்னொரு சாரார். ஆனால், மனிதனாய் பிறந்தவன் மகானாகலாம், மகாத்மாவாகலாம்...தங்களுடைய செயல்பாடுகளின் மூலம்... ஆம்! ஜைனமத ஸ்தாபகர் மகாவீரரின் வாழ்க்கை வரலாறைப் படித்தவர்கள் நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மகாவீரரின் இளமைக்காலப் பெயர் வர்த்தமானன். இவர், அரசகுடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், துறவையே நேசித்தார். அவர் துறவு ஏற்கும் போது வயது 28. அவருக்கு, இந்திரன் ஒரு ஆடையை அளித்தான். தன் நகைகளையெல்லாம் தானம் செய்து விட்டு, அந்த ஆடையை மட்டும் உடுத்திக் கொண்டு கிளம்பிவிட்டார். ஓரிடத்தில் அமர்ந்து தவம் செய்து வந்தார். ஒருநாள், சோமதத்தன் என்பவன் வர்த்தமானனிடம், ""ஐயா! எனக்கு ஏதாவது தாருங்கள், என்றான். அரசனாயிருந்தால் அள்ளிக் கொடுத்திருப்பார். துறவியான அவரிடம் உடுத்திய ஆடையைத் தவிர வேறு ஏதுமில்லையே! அந்த ஆடையில் பாதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தார். மறுபாதியை உடுத்தினார். அது நழுவி விழுந்து விட்டது. சோமதத்தன் தான் வாங்கிய பாதி ஆடையை அருகிலுள்ள ஊரில் வசித்த வியாபாரியிடம் கொடுத்து பணம் கேட்டான். அதை கையில் வாங்கியதுமே, ஏதோ தெய்வத்தன்மையுள்ள ஆடை என்பதைப் புரிந்து கொண்ட வியாபாரி, நூறு தங்கக்காசு தருவதாகச் சொன்னான். அத்தோடு விட்டானா! ""சோமதத்தா! இன்னும் பாதியைக் கொண்டு வா! 300 தங்கக்காசாக தருகிறேன், என்றான். சோமதத்தனுக்கு பேராசை ஆட்டியது. வர்த்தமானன் இருந்த இடத்திற்கு ஓடினான். அவர் கண்மூடி இருந்தார். அவர் முன்னால் கிடந்த ஆடையை தெரியாமல் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். கண்விழித்த வர்த்தமானன், நடந்ததை அறிந்தார்.""ஆஹா...கிழிந்த ஆடையே ஒரு மனிதனை திருடனாக்குகிறது என்றால்...மற்ற பொருட்கள் மீது கொண்ட ஆசை அவனை என்ன பாடு படுத்தும்... இந்த உலகம் என்னாகும், என்று மனஉளைச்சலில் ஆழ்ந்தார். அன்று முதல் திகம்பரராக (நிர்வாணக் கோலம்) இருக்க முடிவெடுத்து விட்டார். இந்த உயர்ந்த எண்ணத்தின் காரணமாகவே, மகாவீரர் நிர்வாணக்கோலத்தில் உள்ளார். இவர் பிறந்த ஆண்டு கி.மு.540. இன்று 2552வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தந்தை சித்தார்த்தா. தாய் திரிசலை. ஊர் வைசாலி அருகிலுள்ள குண்டக்கிராமம். இவர் யசோதை என்பவரை மணந்து பிரியதர்ஷினி என்ற மகளைப் பெற்றார். முப்பது வயதில் துறவறம் ஏற்றார். 12 ஆண்டுகள் பல இடங்களில் சுற்றித்திரிந்து ஞானிகளைச் சந்தித்தார். 43 வயதில் நிர்வாணம் ஏற்றார். 72ம் வயதில் மகாசமாதி அடைந்தார்.எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்க வேண்டும் என்பது இவரது நற்போதனை. இதனை நாமெல்லாம் வாழ்வில் கடைபிடிப்போமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !