திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
ADDED :2229 days ago
திருப்பதி : தமிழகத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 28 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. அதன்பின் புதிய அரசு அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்தது. இவர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நேற்று ஆந்திர அரசு நியமித்து அரசாணை வெளியிட்டது.
இந்த 28 பேரில் ஆந்திராவிலிருந்து எட்டு பேர்; தெலுங்கானாவிலிருந்து ஏழு பேர்; தமிழகத்திலிருந்து நால்வர்; கர்நாடகாவிலிருந்து மூவர்; தில்லி மகாராஷ்ட்ராவிலிருந்து தலா ஒருவருக்கு உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா மற்றும் உளுந்துார் பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.