உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ரகசியமாக தேவ பிரசன்னம்: தந்திரிக்கு தெரியாமல் நடத்தப்பட்டதா?

சபரிமலையில் ரகசியமாக தேவ பிரசன்னம்: தந்திரிக்கு தெரியாமல் நடத்தப்பட்டதா?

சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரிக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. கோவிலின் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சுவாமியின் கருத்து அறிவதற்காக இது நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது பங்குனி உத்திரம் உற்சவம் நடந்து வருகிறது. கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கோவில்களில் எந்தவொரு புதிய பணியையும் துவக்குவதற்கு முன்னால், தெய்வத்தின் கருத்தை அறிவதற்காக தேவ பிரசன்னம் நடத்தப்படுவது வழக்கம்.ஆனால், அதற்கு முன்பாக, கோவிலின் தலைமை அர்ச்சகர் உட்பட பலருக்கும் தெரிவிக்கப்படுவது நடைமுறை. இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று காலை தேவ பிரசன்ன நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக துவங்கியது. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு தான் தந்திரி கண்டரரு மகேஸ்வருவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.எதற்காக ரகசியமாக நடத்தப்படுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், கோவில் அதிகாரிகள் சிலர் கூறுகையில், "கோவிலின் வளர்ச்சிப் பணிகள் குறித்து தெய்வத்தின் கருத்து அறிய தேவ பிரசன்னம் நடத்தப்படுகிறது என்று பட்டும் படாமலும் தெரிவித்தனர். ஆனால், அவ்வாறு வளர்ச்சிப் பணிக்காக இது நடத்தப்படுவதாக இருந்தாலும் அதை ஏன் ரகசியமாக நடத்தவேண்டும் என்பது தான் பலருக்கும் விடை தெரியாத புதிராக இருந்தது.தொடர்ந்து இன்றும் தேவ பிரசன்ன நிகழ்ச்சி நடக்கும் என தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல் பிரபல ஜோதிடர் உண்ணிக்கிருஷ்ண பணிக்கரை கொண்டு நடத்தப்பட்ட தேவ பிரசன்ன நிகழ்ச்சியில் தான், நடிகை ஒருவர் சன்னதிக்குள் நுழைந்து கோவிலுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்பது தெரிந்தது.இதை அடுத்து கோவில் சன்னதிக்குள் நுழைந்து மூலவரை தொட்டு வணங்கியது நான் தான் என, கன்னட துணை நடிகை ஜெயமாலா விளக்கமளித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரான்னி கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !