உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலநாதர் கோயிலில் விசு திருவிழா கொடியேற்றம்!

குற்றாலநாதர் கோயிலில் விசு திருவிழா கொடியேற்றம்!

குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் சித்திரை விசுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசுத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். நடப்பாண்டில் நேற்று காலை திருவிலஞ்சி குமாரர் அழைத்து வரப்பட்டு காலை 5.20 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து குற்றாலநாத சுவாமிக்கும், குழல்வாய்மொழி அம்பாளுக்கும் 3 நாட்கள் சித்ரா பவுர்ணமியில் வசந்த திருவிழா நடைபெறும். 5ம் திருவிழாவில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், விநாயகர், முருகன் தனித்தனியாக தேர் மற்றும் வெள்ளி சப்பரத்தில் பவனி வருதல் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெள்ளி, ரிஷப, பூத, கிளி, யானை, அன்னம், காமதேனு ஆகிய வாகனங்களில் எழுந்தருளி காட்சி தருவர். 10ம் தேதி 7ம் திருவிழாவில் நடராஜ மூர்த்தி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளல், இரவு 7 மணிக்கு அபிஷேகம், சிறப்பு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 11ம் தேதி 8ம் திருவிழாவில் காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. கோயிலில் சபாபதி அபிஷேகம் நடராஜ பெருமானுக்கு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் நடக்கிறது. 13ம் தேதி சித்திரை விசுவை முன்னிட்டு காலை 12 மணிக்கு இலஞ்சி குமாரர் பிரியா விடைபெறும் காட்சியும், மாலை விசு தீர்த்தவாரி, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், பஞ்ச மூர்த்தி புறப்பாடு ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !