உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்தா கோயில்கள் பங்குனி உத்திர விழாக்கோலம்!

சாஸ்தா கோயில்கள் பங்குனி உத்திர விழாக்கோலம்!

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட சாஸ்தா கோயில்களில் பங்குனிஉத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடத்த மக்கள் குவிந்துள்ளனர்.தென் மாவட்டங்களில் பங்குனிஉத்திர நாளில் சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். வெளியூர்களில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பங்குனிஉத்திர நாளில் குலதெய்வ சாஸ்தாவை வழிபட கோயில்களுக்கு திரண்டு வருவர். காட்டுப்பகுதிகளில் அமைந்துள்ள சாஸ்தா கோயில்கள் பங்குனி உத்திர நாளில் விழாக்கோலம் பூண்டு காணப்படும். பங்குனி உத்திர விழா இன்று நடப்பதையொட்டி நெல்லை மாவட்ட சாஸ்தா கோயில்களில் மக்கள் குவிந்துள்ளனர். நெல்லை ஜங்ஷன் மேகலிங்கசாஸ்தா கோவில், டவுன் வேயீன்ற சாஸ்தா, மேலப்பாளையம் பூலுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோயில், பிராஞ்சேரி கரையடி மாடசுவாமி, வீரியப்பெருமாள் சாஸ்தா கோயில், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில், சிங்கிக்குளம் ஆயிரம் கண்ணுடையார் சாஸ்தா, கீழப்பிள்ளையார் குளம் விஸ்வகர்ம திருமேனி அய்யனார் சாஸ்தா, களக்காடு பொன் பெருமாள் சாஸ்தா, நான்குநேரி கரந்தாநேரி பூலுடையார் சாஸ்தா, பத்தமடை தர்ம சாஸ்தா, வீரவநல்லூர் மாணிக்கவாசகர் சாஸ்தா, உக்கிரன்கோட்டை அணைக்கரை சாஸ்தா, சிறுமளஞ்சி செண்டு விளங்கும் சாஸ்தா, இருமன்குளம் சேர்வராயன் சாஸ்தா, நரசிங்கநல்லூர் முருகாவுடையார் சாஸ்தா உட்பட பல்வேறு சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க மக்கள் குவிந்துள்ளனர். சாஸ்தா கோயில்களில் இன்று காலை சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், மாலை அலங்கார தீபாராதனை, இரவு படையல் தீபாராதனை நடக்கிறது. பெண்கள் பொங்கல் இடுகின்றனர். கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

சித்தூர் கோயிலில் நாளை தேரோட்டம்: சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனிஉத்திரத்திருவிழா பிரசித்தி பெற்றது. எட்டாம் திருநாளான இன்று காலை 10 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்புபூஜை, தீபாராதனை, இரவு 12 மணிக்கு சுவாமி குதிரை வாகன வீதியுலா, வாணவேடிக்கை நடக்கிறது. 9ம்திருநாளான நாளை (6ம்தேதி) காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 10.30 மணிக்கு குதிரையோட்டம் நடக்கிறது. பங்குனிஉத்திரத்தையொட்டி நெல்லையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புபஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிக கூட்டம் கூடும் சாஸ்தா கோயில்களில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !