செண்பகவல்லியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ந்தேதி தேர்திருவிழா நடக்கிறது. மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முக்கியமானதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் பங்குனிப் பெருந்திருவிழா கோவில்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு பங்குனிப்பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடிப்பட்டம் நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவகோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. மேலும் கொடிமரம், பலிபீடத்திற்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இரவில் சுவாமி திருவீதியுலா நடந்தது. பூஜைகளை செண்பகராமன், சுவாமிநாதன், சங்கரன், கோபாலகிருஷ்ணன் ஆகிய பட்டர்கள் செய்தனர்.
கொடியேற்றத்தில் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், ஆய்வாளர் சுப்பிரமணியன், டாக்டர் வேலுச்சாமி, கம்மவார் சங்க தலைவர் துரைராஜ், முன்னாள் அறங்காவலர் திருப்பதிராஜா, தொழிலதிபர் செல்லக்கனி, தேர்த்தடி முறைதாரர்கள் மூப்பன்பட்டி பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இனாம்மணியாச்சி பூலோகப்பாண்டியன், ரத்தினவேல்பாண்டியன் ஆகியோரது சார்பில் பூதவாகனமும், சைவ செட்டியார்கள் சங்கத்தின் சார்பில் குதிரை வாகனமும் பித்தளை தகடுகள் புதுப்பிக்கப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர் முறையில் சிறப்பு பூஜைகளும், சுவாமி அம்பாள் திருவீதிவுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ந்தேதி மாலையில் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், தேர்திருவிழாவும் நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் சித்திரை முதல்நாளன்று தீர்த்தவாரியும், அதற்கடுத்தநாள் சுவாமி அம்பாள் திருக்குளத்தில் பவனிவரும் தெப்பத்தேர் திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.