உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி விழா: அக்.28ல் துவக்கம்

குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி விழா: அக்.28ல் துவக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 28ல் துவங்கும் கந்த சஷ்டி திருவிழா நவ., 3 வரை நடக்கிறது. விழா துவங்கும் வகையில் அக்., 28 காலை அனுக்ஞை பூஜையை தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை முடிந்து, யாகசாலை பூஜை துவங்கும்.

காப்பு கட்டு: உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கும், விரதம் மேற்கொள்வோருக்கும் காப்பு கட்டப்படும். தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள் பாலிப்பார்.

சூரசம்ஹாரம்: நவ., 1ல் வேல் வாங்குதல், 2ல் சூரசம்ஹாரம், 3 ல் காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம் நடக்கும். தொடர்ந்து மூலவர்முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.

அலங்காநல்லுார்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்.,28 காலை 9:15 மணிக்கு விக்னஷே்வரர் பூஜை, பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மகாஅபிஷேகம், தீபாராதனை நடக்கும். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தின் வழியாக புறப்பாடு நடக்கும். அக்., 29 ல் காமதேனு , 30 ல் யானை, 31ல் ஆட்டு கிடாய் , நவ., 1ல் சப்பரம் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும்.


நவ., 2 முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா நடக்கும். அன்று மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடக்கும். பின் அதே வாகனத்தில் முருகன் கஜமுகாசூரனையும், சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பின் சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடக்கும். நவ., 3 காலை திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெறும். மாலை ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடனும் விழா நிறைவுபெறும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பலர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !