உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்திரை பதிக்கும் சித்திரை!

முத்திரை பதிக்கும் சித்திரை!

மதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பங்குனியிலும் நடைபெறும். சைவ-வைணவ ஒற்றுமைக்காக மன்னர் நாயக்கர் இரண்டு திருவிழாவையும் சித்திரை மாதம் மாற்றிவிட்டார்.

சிவகங்கை மானாமதுரையில் சித்திரைப் பவுர்ணமி தினத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கநாதரைக் கவர்ந்து சென்ற மாலிக்காபூரிடமிருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்பண்ணா மீட்டதால் சித்திரையில் இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா விருப்பண்ண திருவிழா எனப்படும்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைமாத முதல் செவ்வாயன்று தேர்த்திருவிழா நடக்கிறது. பக்தர்கள் அன்று வேப்பஞ்சேலை அணிந்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

திருவாரூர் திருச்செங்காட்டங்குடியில் ஈசன் சிறுத்தொண்டர் நாயனாரிடம் பிள்ளைக்கறி அமுது கேட்ட லீலை சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஈசனை வழிபட குழந்தைப்பேறு கிடைக்கும்.

திருவாரூர் தேரழகு: திருவாரூர், தேரழகுக்குப் பெயர் பெற்ற தலம். ஆழித்தேர் என்றழைக்கப்படும் இவ்வாலயத்தின் அழகுத்தேரில் இறைவன் பவனி வருவதும் சித்திரையில்தான்.

சீர்காழிக் குளக்கரையில் நின்றழுத குழந்தை சம்பந்தனுக்கு அம்பிகை ஞானப்பால் ஊட்டியது சித்திரையில் என்பதால், ஞானப்பால் பருகும் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரையில் நடத்தப்படுகிறது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள், வெள்ளியன்று மட்டுமே திறந்திருக்கும் நடை, சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 15நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆலயப் பிராகாரத்தில் மட்டுமே தங்கத் தேரில் வலம் வரும் அன்னை, சித்திரை முதல்நாளில் திருவீதியில் உலா வருவாள்.

சிவகங்கை கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியார் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளில் அம்மன் வீதியுலா வர, கோடை வெம்மை அம்மனை தாக்காதபடி வீதியின் இருபுறமும் நின்று பன்னீரைத் தெளிப்பார்கள்.

திருக்கடையூர் அபிராமி கோயிலில் காலனிடமிருந்து தன் பக்தன் மார்க்கண்டேயனைக் காலகாலன் காத்து சிரஞ்சீவியாக வாழ்வளித்தது, சித்திரை மாதத்தில் என்பதால் இச்சம்பவம் இங்கு திருவிழாவாக நடத்தப்படுகிறது.

விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியில் மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா, கர்நாடகா, கேரளா மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.

சபரிமலை விஷூ உற்சவம்: சபரிமலை: சித்திரை விஷூ உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை விஷூ கனி உற்சவம் கோவிலில் நடைபெறும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், சித்திரை விஷூ உற்சவத்திற்காக கோவில் நடை 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறந்தார். அன்றைய தினம் வேறு பூஜைகள் இல்லை.நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. மேலும், சிறப்பு பூஜைகளாக புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை நேற்று முதல் துவங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறும். நாளை (13ம் தேதி) அதிகாலை சித்திரை விஷூ கனி உற்சவம் நடைபெறும். மண்டல, மகர ஜோதி உற்சவங்களுக்கு அடுத்து அதிகளவு பக்தர்கள் வரும் உற்சவமாக இது திகழ்வதால், பம்பை, சபரிமலை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மூன்று இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் வழியாகவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முதல் வரும், 18ம் தேதி பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படும். திருவனந்தபுரம், எருமேலி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு கேரள மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.சிறப்பு பூஜை, விஷூ உற்சவம் ஆகியவை முடிந்து வரும், 18ம் தேதி இரவு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பூ பூக்கும் மாசம் சித்திரை மாசம்

நாகை திருப்பயத்தங்குடி திருப்பயற்றீசர் கோயிலின் தலவிருட்சம் சிலந்தி மரம் என்ற மூலிகை மரம். சித்திரை முதல் நாள் தொடங்கி வைகாசி 18 நாள் வரை மட்டுமே இம்மரத்தில் பூ பூக்கும். இப்பூக்களை இங்குள்ள இறைவனுக்குச் சாற்றி வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் யாவும் நிவர்த்தியாகும்.

தைலக்காப்பு அபிஷேகம் (சித்திரையில் சந்தனக்காப்பு!)

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை, சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தைலக் காப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள், கையாலேயே சந்தனம் அரைத்து அம்பாள்-ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது! இந்த சந்தனக்காப்பு அவர்கள் திருமேனியில் ஒரு வருடம் இருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை மாதமே களையப்பட்டு மீண்டும் பூசப்படும். இறைவன் திருமேனியில் தினசரி மாலைகள் மட்டுமே அணிவிக்கப்படும். சிவனாருக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்களை நனைத்து காய வைத்து சாத்துவது இங்கு மற்றொரு விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !