சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு ரோப்கார்: பணி தீவிரம்
சோளிங்கர்: சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு எளிதில் செல்லும் வகையில் ரோப்கார் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வேலுார் மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 1380 படிகட்டுகளை ஏறி பெரிய மலைக்கு செல்ல வேண்டும். இதனால் முதியோர் சிரமப்பட்டனர். இதற்காக டோலி வசதி செய்யப்பட்டது.இந்நிலையில் மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் திட்டம் 8.27 கோடி ரூபாய் செலவில் 2016ல் துவக்கப்பட்டது. செங்குந்தான மலை உச்சியில் ரோப்கார் அமைக்கும் பணி சிரமமானது என்பதாலும் இதற்கான நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதாலும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தன.இந்நிலையில் திட்டத்திற்கான மொத்த நிதியும் கடந்தாண்டு ஒதுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இந்த பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பெரியமலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல 448 மீ. உயரத்தில் செங்குத்தாக ரோப்கார் பாதை அமைக்கப்படுகிறது.தலா நான்கு பேர் வீதம் நான்கு ரோப்கார்களில் 16 பேர் மலைக்கு சென்று வரலாம்.ஒரு மணி நேரத்தில் 400 பேர் வீதம் ஒரு நாளைக்கு 3000 பேர் சென்று வரலாம். ரோப்கார் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது.ஆறு மாதங்களில் 100 சதவீத பணிகள் முடிந்து விடும்.அதன் பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரோப்கார் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.