திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: கடற்கரையில் பக்தர்கள் வெள்ளம்
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்திற்கு இடையே, சூரசம்ஹார விழா, கோலாகலமாக நடந்தது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாகும். இங்கு கந்த சஷ்டி திருவிழா, அக்., 28ல் துவங்கியது.விரதம்ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் தங்கி, விரதத்தை துவக்கினர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. டர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.காலையில், யாகசாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுவாமி, அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தனர். பின், சுவாமி ஜெயந்திநாதர் அலங்காரத்துடன், சூரசம்ஹாரத்திற்கு தயாரானார்.நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, சிவன் கோவிலில் இருந்து, படை பரிவாளங்களோடு, சூரபத்மன் கடற்கரைக்கு கிளம்பினார். மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரம் நிகழ்வு துவங்கியது.
கோஷமிட்டனர்: ஏராளமான பக்தர்கள் முன்னிலையில், கஜமுக சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகசூரனாகவும், பின், சுயரூபமான சூரபத்மனாகவும் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார்.இதைதொடர்ந்து சேவலாகவும், மாமரமாகவும் போரிட்ட சூரனை, முருகப்பெருமான் ஆட்கொண்டார். கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என, கோஷமிட்டனர். பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர். தொடர்ந்து ஜெயந்திநாதர், சந்தோஷ மண்டபத்தில் காட்சிஅளித்தார்.இன்று இரவு, சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.டி.ஜி.பி., திரிபாதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, சுந்தர், புகழேந்தி, அமைச்சர்கள் ராஜூ, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, அறநிலையத்துறை முதன்மை செயலர் பனீந்திரரெட்டி, துாத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்துாரி உள்ளிட்டோர், கந்த சஷ்டி விழாவில் பங்கேற்றனர்.