பொள்ளாச்சி கந்த சஷ்டி: சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமி
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவில், முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை பக்தர்கள் கண்டுகளித்தனர்.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த, 28ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம் முருகப்பெருமான் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.
நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.எஸ்., கோவில் வீதி கிழக்கு வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில், கஜமுகா சூரனை வதம் செய்தார்.தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணய்யர் சந்திப்பில், சிங்கமுகாசூரன்; வெங்கட்ரமணய்யர் வீதி, ராஜாமில் ரோடு சந்திப்பில் பானுகோபன், உடுமலை ரோடு தேர்நிலைப் பகுதியில் சூரபத்மனையும், முருகப்பெருமான் வதம் செய்தார்.இதில், திரளாக பங்கேற்ற பக்தர்கள், சூரனை வதம் செய்யும் போது, பக்தி பரவசத்தில் அரோகரா, அரோகரா என கோஷமிட்டனர்.சூரசம்ஹார விழாவையொட்டி, விரதமிருந்த பக்தர்கள், வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் பழவகைகள் கொண்டு பிரசாதம் தயாரித்து, சுப்ரமணியசுவாமிக்கு படைத்து விரதம் முடித்தனர்.இன்று காலை, 10:00 மணிக்கு மகா அபிேஷகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; நாளை மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்வச பூர்த்தியும் நடக்கிறது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், நேற்று மாலை சூரனை வதம் செய்யும் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.உற்சவர் வேலாயுசாமி சப்பரத்தில் எழுந்தருள, உடன் சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சிவலோகநாதர் கோவில் அருகே கஜமுகாசூரன் வதம் நடந்தது.தேரோடும் வீதியில் சிங்கமுகன் வதம்; கிருஷ்ணசாமி புரத்தில் பானுகோபன் வதம்; பொன்மலை அருகே, சூரபத்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அதன்பின், சூரசம்ஹாரம் நடந்த மலையை சுற்றி வேலாயுதசாமி மீண்டும் ஒரு முறை கிரிவலம் வந்து, மலையேற்ற நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பக்தர்களுக்கு தண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மதியம், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் அம்மனிடம் வேல்வாங்கும் உற்சவம் நடந்தது. மாலையில், சுப்ரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.நாளை காலை, 11:00 மணிக்கு முருகன், வள்ளி தெய்வாணை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.