திருக்கல்யாணத்துடன் பழநி சஷ்டி விழா நிறைவு
பழநி : கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, பழநி முருகன் கோவிலில் நேற்று, சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா, அக்., 28ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது.விழாவின் நிறைவாக, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, விநாயகர் பூஜை, யாக பூஜை, சண்முகர், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, பகல், 12:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பெரியநாயகியம்மன் கோவிலில், இரவு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, தங்கக் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.குடிநீர் திட்டம்பழநி முருகன் கோவிலுக்கு, நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பாலாறு அணை அருகே தடுப்பணை அமைத்து, குடிநீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணி, 22.72 கோடி ரூபாயில், குடிநீர் வாரியம் மூலம் நடக்க உள்ளது. இதற்கான பூமி பூஜை, பழநி கோவில் அன்பு இல்லத்தில் நேற்று நடந்தது. இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி, குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். பாலாறு -பொருந்தலாறு அணையில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் தடுப்பணை கட்டப்பட்டு, நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து, குழாய் மூலம் அன்பு இல்லத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மலைக் கோவில், தங்கும் விடுதிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி கூறுகையில், இப்பணி ஓராண்டில் முடிக்கப்படும், என்றார்.