உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி காவிரி ஆற்றில் ஆரத்தி வழிபாடு

திருச்சி காவிரி ஆற்றில் ஆரத்தி வழிபாடு

திருச்சி : காவிரி ஆற்றை பாதுகாக்க ரதயாத்திரை நடத்தி வரும் சந்நியாசிகள், திருச்சி காவிரி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த மாதம் 21ம் தேதி, தலைக் காவிரியில், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் தலைமையில் விழிப்புணர்வு ரத யாத்திரை துவங்கியது.கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரத யாத்திரை, நேற்று திருச்சி மாவட்டத்துக்கு வந்தது. ரத யாத்திரை குழுவினருக்கு விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

நேற்று மாலை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு வந்த ரத யாத்திரை குழுவினர், காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடத்தினர். காவிரிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.வரும், 8ம் தேதி பூம்புகாரில் நிறைவு பெறும் ரத யாத்திரையில் சந்நியாசிகள் சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்கின்றனர். நதிகளை தேசிய மயமாக்கி, காவிரியுடன் தென்னக நதிகளை இணைக்க வேண்டும். கங்கையை துாய்மைப்படுத்த, மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கியது போல், காவிரியை துாய்மைப்படுத்தவும் நிதி ஒதுக்க வேண்டும். காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று, ரத யாத்திரைக்குழுவுடன் வந்துள்ள, சந்நியாசிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !