பனமரத்துப்பட்டியில் ’கருப்பணாருக்கு’ காவு சோறு வீசி வினோத வழிபாடு
பனமரத்துப்பட்டி: அம்மன் கோவிலில், மரத்திலுள்ள கருப்பணார் சுவாமிக்கு, காவு சோறு வீசிய வினோத நிகழ்ச்சி நடந்தது.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம், பிடாரி அம்மன் கோவிலில், 100 அடி உயரமுள்ள ஆச்சா மரத்தில், கருப்பணார் சுவாமி இருப்பதாக, மக்கள் வழிபடுகின்றனர். அக்கோவில் திருவிழா, கடந்த அக்., 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (நவம்., 2ல்), அம்மனுக்கு அபிஷேகம், வெள்ளி கவசம், தீபாராதனை, சக்தி அழைத்தல் உள்ளி ட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள், பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். பூசாரிகள், ஒரு புது பானையில், பொங்கல் வைத்தனர். ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்து, அதன் ரத்தத்தை சோற்றில் கலந்து, காவு சோறு தயாரித்தனர். 8:00 மணிக்கு, அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.
பூசாரிகள், ஆச்சா மர உச்சியை நோக்கி, காவு சோறு உருண்டையை வீசி, திரும்பி பார்க்காமல் சென்றனர். மரத்திலுள்ள கருப்பணார், சோற்றை பிடித்துக் கொள்வதால், மேலே வீசியது, திரும்பி வருவதில்லை என, பூசாரிகள் தெரிவித்தனர். அதற்கேற்ப, நேற்று (நவம்., 3ல்) காலை, காவு சோறு விழுந்ததற்கான அறிகுறி இல்லை. தொடர்ந்து, பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில், சமைத்து, உறவினர், நண்பர்களுக்கு விருந்து வைத்து, அம்மனை வழிபட்டனர்.