லிங்க வடிவில் 11 விநாயகர் கோயில்
வேலூர் சேண்பாக்கம் செல்வவிநாயகர் கோயிலில், விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக (சிற்பியால் செதுக்கப்படாமல் தானாக தோன்றியது) அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். இங்கு 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து வந்தார். 11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் ஞான திருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரின் வழிபாடு செய்ததில் இருந்து, இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்குகிறது. ஸ்ரீசக்ரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகர் எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.