உள்ளூர் செய்திகள்

எந்நாளும் இன்பமே...

ராகு கேது பெயர்ச்சியால் நன்மையா... தீமையா... என்ற குழப்பம் வேண்டாம். நாகர்கள் வழிபாடு செய்த சிவன் கோயில்களை தரிசித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.திருப்பம் வர.. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள திருப்பாம்புரம் பாம்புரநாதரை தரிசிக்க நல்ல திருப்பம் வரும். விநாயகர் ஒருமுறை சிவனை வணங்கினார். அப்போது சிவனின் கழுத்தில் இருந்த பாம்பு, 'நான் பலசாலி என்பதால் தான் முதல் கடவுளான விநாயகரும் என்னை வணங்குகிறார்' எனக் கருதியது. இதை அறிந்த சிவனுக்கு கோபம் வரவே சாபமிட்டார். அதனால் ஆதிசேஷன் உள்ளிட்ட அனைத்து பாம்புங்களும் பலம் இழந்தன. இதன்பின், 'சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் மகாசிவராத்திரியன்று வழிபட்டால் தீர்வு கிடைக்கும்' என அவற்றுக்கு சிவனே வழிகாட்டினார். ஆதிசேஷன் தலைமையில் அஷ்ட நாகங்கள், ராகு, கேது உள்ளிட்ட அனைத்தும் இங்கு வழிபட்டே இழந்த பலத்தை பெற்றன. தேவார பாடல் பெற்ற தலமான இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. எதிரில் ஆதிசேஷ தீர்த்தம் உள்ளது. ஞாயிறன்று ராகுகாலத்தில் அர்ச்சனை செய்தால் மனவலிமை அதிகரிக்கும். ராகு, கேது திசை நடப்பவர்கள், கடன் பிரச்னை தீர பரிகார பூஜை செய்கின்றனர். ராகு, கேது தோஷம் தீர வன்னி மரத்தடியில் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்கின்றனர். பாவம் தீர...நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் - தேவூர் சாலையில் உள்ள ராதாமங்கலம் நாகநாதரை தரிசித்தால் முன்வினை பாவம் தீரும். வேத பண்டிதர் நம்புதத்தனின் மகன் பாம்பு கடித்ததால் இறந்தான். தன் மகனின் ஜாதகத்தில் நாகதோஷம் இல்லை; அப்படி இருந்தும் ஏன் இறந்தான் என கோபப்பட்டார். அதனால் 'நாகர் இனம் அழிந்து போகட்டும்' என சாபமிட்டார். இதன் பின் தவறை உணர்ந்த நாகங்கள் இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டன. மங்கள வாழ்வை நாகங்கள் பெற்றதால் இத்தலம் முன்பு 'ராகு கேது மங்கலம்' எனப்பட்டது. பின்னர் 'ராதாமங்கலம்' என மாறியது. சுவாமியின் பெயர் நாகநாதர். அம்மனின் பெயர் சாந்த நாயகி. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி, அமாவாசை, நாகசதுர்த்தி அன்று வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். விவசாயிகள் இங்கு வழிபட்டால் எலித்தொல்லை மறைந்து விளைச்சல் அதிகமாகும். அன்று முதல்...கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் உள்ள தலம் அரவூர். பாம்பைக் கொன்றவர்கள் இங்குள்ள சிவனை வழிபட்டால் பாவம் தீரும். கார்கோடகன் என்னும் பாம்பு கடித்ததால் பரீட்சித்து மன்னர் இறந்தார். இதற்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க யாகம் செய்தான் மன்னரின் மகனான ஜனமேஜெயன். இதை அறிந்த கார்கோடகன் பாம்பு இங்கு தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டது. அப்போது 'இங்கு வழிபடும் பக்தரை கடிக்க மாட்டோம், சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்த மாட்டோம்'' என சிவனிடம் வாக்கு கொடுத்தது. அன்று முதல் இந்த ஊரில் யாருக்கும் பாம்பினால் தீங்கு ஏற்படுவதில்லை. சுவாமியின் திருநாமம் கார்கோடேஸ்வரர். அம்மன் திருநாமம் மங்களாம்பிகை. யாகம் நடத்த ஜனமேஜெயன் உருவாக்கிய ஹோம குண்டம் தற்போது 'ஹோமக்குளம்' எனப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்புகள் கொண்ட இங்கு சுந்தரர் வழிபாடு செய்துள்ளார். மராட்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.பாம்பை அடித்தவர்கள் இங்கு வழிபட்டால் சந்ததிக்கும் தோஷம் ஏற்படாது. ஆப்பரேஷனா...அறுவை சிகிச்சை (ஆப்பரேஷன்) செய்யும் முன் கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்குடி அனந்தேஸ்வரரை தரிசித்தால் விரைவில் குணம் அடைவர். முன்பு இப்பகுதி வில்வ வனமாக இருந்தது. அஷ்ட நாகங்களில் ஒன்றான 'அனந்தன்' தனது தோஷம் தீர இங்குள்ள சிவனை வழிபட்டது. சுவாமியின் திருநாமம் அனந்தேஸ்வரர். அம்மனின் திருநாமம் சவுந்திரநாயகி. ராஜராஜசோழனின் பாட்டியான செம்பியன்மாதேவிக்கு இங்கு திருமணம் நடந்தது. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரனின் குலதெய்வம் இது. இங்குள்ள உற்ஸவ மூர்த்தி கையில் பாம்பு ஏந்தியபடி இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்யும் முன் இங்குள்ள அம்மன், சுவாமிக்கு பால் அபிேஷகம் செய்கின்றனர். சர்ப்ப தோஷம், நாக தோஷம் தீர உலோகத்தால் ஆன நாகர் சிலையை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். பொய் சொல்லாதே காஞ்சிபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமியை தரிசித்தால் பிறரை திட்டியதால் ஏற்பட்ட பாவம் தீரும். கயிலாயத்தில் நடந்த சொக்கட்டான் விளையாட்டின் போது சிவனுக்காக பொய் சொன்னார் பெருமாள். கோபம் கொண்ட பார்வதி பாம்பாக மாறும்படி பெருமாளை சபித்தாள். இதில் இருந்து விடுபட காஞ்சிபுரத்தில் தங்கி சிவனை வழிபட்டார். அவரே 'அனந்த பத்மநாபர்' என்ற பெயருடன் சயனகோலத்தில் மகாலட்சுமியுடன் இங்கு இருக்கிறார். இத்தலத்தில் காளத்தி மலையைச் சேர்ந்த மாகாளன் என்ற பாம்பு மோட்சம் வேண்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது. அந்த லிங்கம் 'மாகாளேஸ்வரர்' என்னும் பெயரில் இங்கு உள்ளது. இவரை தரிசித்தால் தோல் நோய், திக்குவாய் பிரச்னை தீரும். பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவம் போக்கும் தலம் இது. இது கேதுவுக்கு உரியது. ஒற்றுமை சிறக்க...எதிரும் புதிருமாக செயல்படும் தம்பதியும் ஒற்றுமையாக வாழ காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்துாரில் உள்ள ஞானாம்பிகை, காளத்தீசுவரரை தரிசிக்க உடனடி பலன் கிடைக்கும். தவம் புரிய ஏற்ற இடங்களை தன் கழுத்தில் உள்ள நாகத்தின் மூலம் தேர்வு செய்தார் சிவபெருமான். அவை காளகஸ்தி, காட்டாங்குளத்துார், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டு வரும் வழியில் ராகுவும், கேதுவும் காட்டாங்குளத்துாரில் ஓரிரவு முழுவதும் தங்கி சிவபெருமானை வழிபட்டனர். அதற்கு ஏற்றவாறு இங்கு ராகுவும், கேதுவும் ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தருகின்றனர். இங்கு நவக்கிரகங்கள் தனித்தனியாக அருள்புரிகின்றனர். இங்குள்ள நந்தி தேவருக்கு நெய் அபிேஷகம் செய்தால் தங்க நகைகள் சேரும். சனிக்கிழமை தோறும் நடக்கும் சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்றால் தம்பதி ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். இருவரும் ஒருவராக...புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது வாராப்பூர் அகத்தீஸ்வரர் கோயில். இங்கு ராகு, கேது இருவரும் இணைந்து ஒரே வடிவில் அருள்புரிகின்றனர். சிவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு கைகட்டிய நிலையில் உள்ளனர்.கைலாயத்தில் இருந்து பொதிகை மலைக்கு செல்லும் வழி எங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் அகத்தியர். அதில் இக்கோயிலும் ஒன்றாகும். அம்மனின் திருநாமம் சவுந்தராம்பிகை. 1300 ஆண்டுகள் பழமையான திருத்தலம். ராகுவும், கேதுவும் கைகளை கட்டியபடி சிவபெருமானின் நேரடி பார்வையில் இங்கு உள்ளனர். காளஹஸ்திக்கு நிகரான இங்கு வழிபடுவோருக்கு திருமணத்தடை விலகும். குழந்தைப்பேறு கிடைக்கும். நோய்கள் தீரும். காலசர்ப்பதோஷம், நாக தோஷத்திற்குசிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. தம்பதியாக ராகு, கேதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயிலில் ராகு, கேது இருவரும் மனைவியுடன் அருள்புரிகின்றனர். இக்கோயிலை தென்காளஹஸ்தி என அழைக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த சிவபக்தரான பிச்சை என்பவர் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று காளஹஸ்தி செல்வது வழக்கம். வயதான பிறகு அவரால் அங்கு செல்ல முடியவில்லையே என வருந்தினார். ஒரு சிவராத்திரியன்று கனவில் தோன்றிய சிவன், ''இங்குள்ள காட்டில் அரளிச் செடியின் கீழ் குடியிருக்கிறேன். என்னை தரிசிக்க வா'' என அழைத்தார். மறுநாள் ஊராருடன் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். கோயில் உருவாக்கப்பட்டு 'காளத்தீஸ்வரர்' என சுவாமிக்கு பெயரிட்டனர். அம்மனின் பெயர் ஞானப்பூங்கோதை. இங்கு ராகுவுடன் சிம்ஹியும், கேதுவுடன் சித்ரலேகாவும் சிவனை வழிபட்ட நிலையில் உள்ளனர். இக்கோயிலை தரிசித்தால் திருமணத்தடை விலகும். தம்பதி ஒற்றுமை சிறக்கும்.-முற்றும்ஜெ.விஜயராகவன்80560 41076