கட்டீல் துர்காம்மா
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகிலுள்ள கட்டீல் என்னும் இடத்தில் துர்காம்மா கோயில் உள்ளது. யட்சகானம் என்னும் வழிபாடு செய்தால் இவள் அருளால் விருப்பம் நிறைவேறும். இங்கு நிலவிய பஞ்சத்தைப் போக்க ஜாபாலி முனிவர் தவத்தில் ஈடுபட்டார். இதன் பயனாக காமதேனுவின்(தேவலோக பசு) மகள் நந்தினியை பூமியில் தங்கி வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளையிட்டார். ஆனால் பூமிக்கு வர நந்தினிக்கு மனமில்லை. அத்துடன் தன்னை பூலோகத்திற்கு அனுப்பக் கூடாது என பார்வதியை சரணடைந்தது. “நீ பசுவாகச் செல்ல வேண்டாம். புனித நதியாக மாறி மக்களுக்கு சேவை செய்” என உத்தரவிட்டாள் பார்வதி. அதன்படி நேத்திராவதி என்னும் நதியாக நந்தினி இங்கு ஓட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அருணாசுரன் என்பவன், பூவுலகில் அட்டகாசம் செய்து வந்தான். அவனிடம் இருந்து உயிர்களைக் காக்கும்படி முனிவர்கள் வேண்டினர். அசுரனை வதம் செய்யும் நோக்கில் மோகினியாக பூமியில் தோன்றினாள் பார்வதி. அவளது அழகில் மயங்கிய அசுரனும் பின்தொடர்ந்தான். நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்புறம் ஒளிவது போல பார்வதி நாடகமாட, அசுரன் அவளை பிடிக்க முயன்றான். வண்டு வடிவெடுத்து அசுரனை அழித்தாள் பார்வதி. உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர். உக்கிரம் தணிந்த அவள் ஆற்றின் நடுவில் 'துர்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோயில் கொண்டாள். சிவலிங்க வடிவில் இருக்கும் இவளுக்கு 'துர்காம்மா' என்றும் பெயருண்டு. நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால் இத்தலம் 'கடில்' எனப்பட்டது. 'கடில்' என்றால் 'மடி'. தற்போது 'கட்டீல்' எனப்படுகிறது. கோயிலின் பின்புறம் ஆறு இரண்டாக பிரிந்து கோயிலைச் சுற்றி ஓடுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக தீர்த்தம் தரப்படுகிறது. நோய், குடும்பத் தகராறு, சொத்து பிரச்னை தீர இளநீர் காணிக்கை செலுத்துகின்றனர். அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில் உடுப்பி சங்கரபுரம் மல்லிகை முதலிடம் வகிக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் கிடைக்க மல்லிகைப்பூக்களை தொடுத்து அணிவிக்கின்றனர். கணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாக தேவதை, பிரம்மா சன்னதிகள் உள்ளன.எப்படி செல்வது: மங்களூருவில் இருந்து 26 கி.மீ., விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, நாக பஞ்சமி.நேரம்: காலை 6:00 - இரவு 9:30 மணிதொடர்புக்கு: 0824 - 220 0361, 220 0591அருகிலுள்ள கோயில் : மங்களூரு பாண்டேஸ்வரர் 26 கி.மீ., (நிம்மதிக்கு...)நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 0824 - 244 1210