உள்ளூர் செய்திகள்

லாபம் பெருக...

தொழிலில் லாபம் பெருக வேண்டுமா... டில்லிக்கு அருகே உள்ள செக்டார் 62 நொய்டா கார்த்திகேயா கோயிலுக்கு வாருங்கள். கோயில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அதற்காக தென்னிந்திய மக்களுக்காக முருகன் கோயிலை உருவாக்க வேண்டும் என வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (விபிஸ்), நிர்வாகத்தினர் விரும்பினர். இதற்காக நொய்டா ஆணையத்திடம் அனுமதி கேட்ட போது நொய்டாவில் 1000 ச.மீ., அளவுள்ள காலியிடம் வழங்கியது. கட்டுமானப்பணி ஏப்.22, 2018 அன்று தொடங்கியது. திருப்பணி நிறைவேறியதும் ஆக.21, 2022ல் கும்பகோணத்தை சேர்ந்த பிரம்மஸ்ரீ சேனாபதி தலைமையில் 40 வேத பண்டிதர்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிேஷகம் நடந்தது. கருவறையில் கார்த்திகேயன் என்னும் திருநாமத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். 4.5 அடி உயரம் கொண்ட முருகனின் சிலை ஒரே கல்லால் ஆனது. தொழிலில் தடை நீங்கி லாபம் பெருகவும், எதிரி தொல்லை மறையவும் இங்கு வழிபடுகின்றனர். அத்துடன் திருமணத்தடை அகலவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பூமாலை சாத்தி விளக்கேற்றுகின்றனர். பிரச்னை தீர கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து தரிசிக்கின்றனர். விநாயகர், ராமர், சந்திர மவுலீஸ்வரர், திரிபுரசுந்தரி, நவக்கிரகம், சாந்த ஆஞ்சநேயர், காஞ்சி மஹாபெரியவர் சன்னதிகளும் இங்குள்ளன. லலிதா சகஸ்ர நாம மண்டலியுடன் இணைந்து வெள்ளி தோறும் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், கந்தசஷ்டிக் கவசம், கந்தரனுபூதி பாராயணம் நடக்கிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு துணி, காகிதப் பைகளை இலவசமாக தருகின்றனர்.எப்படி செல்வது * டில்லி விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ., * டில்லி ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ,விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, கந்தசஷ்டி, நவராத்திரி, ஸ்ரீராமநவமி.நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 98219 60888, 98111 61370அருகிலுள்ள கோயில்: டில்லி கருமாரி அம்மன் 40 கி.மீ., (திருமணம் நடக்க...)நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 98713 05767, 98188 73438