உள்ளூர் செய்திகள்

குழந்தை வரம்தரும் பாலசுப்பிரமணியர்

குழந்தை இல்லையே என வருத்தப்படுபவர்களுக்கு வரப்பிரசாதியாக உள்ளார் தென்காசி ஆய்க்குடியில் உள்ள பாலசுப்பிரமணியர். சங்க காலத்தில் பொதிகை மலைப்பகுதியை 'ஆய்' எனும் அரசர் ஆட்சி செய்தார். இதனால் இப்பகுதி ஆய்க்குடி என்றானது. இதன் அருகில் மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் இருந்தது. அக்குளத்தை துார்வாரியபோது அதனடியில் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் அழகிய சுப்பிரமணியர் சிலை கிடைத்தது. அச்சிலையை பக்தர் ஒருவர் எடுத்து தனது வீட்டு ஆட்டுத்தொழுவத்தில் வைத்து பூஜை செய்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாலசுப்பிரமணியர் அரசும், வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதற்கு அவர் அந்த இடத்தை காண்பிக்கும்படி சுவாமியிடம் வேண்டவே, தொழுவத்தில் இருக்கும் செம்மறி ஆடு சென்று நிற்கும் இடம்தான் என்று கூறி மறைந்தார். அதன்படி இவ்விடத்தில் ஆடு நிற்கவே பாலசுப்பிரமணியருக்கு கோயில் கட்டப்பட்டது. மூலவர் பாலசுப்பிரமணியர் இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு சுவாமியை ராமபக்தர்கள் விரும்பி வணங்குவதால், 'ஹரிராமசுப்பிரமணியர்' என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள நதிக்கு 'அனுமன் நதி' எனவும் பெயரிடப்பட்டது. இது வற்றாத ஜீவநதியாக உள்ளது. இக்கோயிலின் சிறப்பம்சமே படிப்பாயசம்தான். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இங்கு வேண்டினால் அந்த பாலமுருகனே பாலகனாக வந்து பிறப்பார். பலன் அடைந்தவர்கள் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி (படிப்பாயசம்) சிறுவர்களுக்கு கொடுக்கின்றனர். ஏனெனில் சுவாமியே சிறுவர்களின் வடிவில் வந்து பாயசத்தை பருகுகிறார். பாயாசத்தில் சுக்கு, ஜீரகம், பாசிப்பருப்பு முதலியன சேர்க்கப்படுகின்றன. காவடி, பால்குடம் எடுத்தும் முடிக்காணிக்கை செலுத்தியும் லட்சார்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம். குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி, கேள்வி, ஞானம், சங்கீதத்தில் சிறக்கவும் வேண்டிக்கொள்ளலாம்.இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு, வேம்பு, மாவிலங்கை, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்சவிருட்சங்கள் இக்கோயில் தலவிருட்சங்களாக உள்ளன. சித்திரை மாதப் பிறப்பு முதல் சில தினங்களுக்கு உதய சூரியனது கிரணங்கள் மூலவர் மீது விழுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். எப்படி செல்வது: தென்காசி - ஆய்க்குடி சாலை வழியாக 7 கி.மீ., விசேஷ நாள்: சித்திரைப்பிறப்பு வைகாசி விசாகம், கந்தசஷ்டி திருக்கார்த்திகை, தையில் பாரிவேட்டை, தைப்பூசம்நேரம்: அதிகாலை 5:30 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04633 - 267 636அருகிலுள்ள தலம்: குற்றாலம் குற்றாலநாதர் (சிவபெருமான்) கோயில் 15 கி.மீ., (தலைவலி, தோல் நோய் தீர...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 04633 - 283 138, 210 138