சனாதன தர்மம் - 11
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி...'ஆத்மாவானவர் அணுவுக்கு அணுவாயும் பெரியதற்கெல்லாம் பெரிதாயும் இருக்கிறார்' என கடோபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம் தொடங்குகிறது. 'அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்' என விநாயகர் அகவல் பாடலில் அவ்வையார் பாடுகிறார். அணு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் 1808 ல் டால்டன் என்னும் அறிஞரால் வெளியிடப்பட்டது. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணுவைப் பற்றி நம் இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. கடவுளே இல்லை எனச் சொல்வது சனாதனத்திற்கு ஒன்றும் புதியதல்ல. வேத காலத்திலேயே 'நிரீச்வர வாதம்' என்று இருந்திருக்கிறது. ஆம்... அப்படி சொன்னவர்களில் ஒருவன் ஹிரண்யகசிபு என்னும் அசுரன். கடவுள் இல்லை என்றதோடு, 'நானே கடவுள்; என்னை மட்டுமே வழிபட வேண்டும் என ஆணையிட்டான். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவ்வாறே கழிந்தன. அந்த அசுரனின் வயிற்றில் தோன்றியவனே விஷ்ணுபக்தனான பிரகலாதன். கருவிலேயே திருவுடையவன் அவன், 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்தான். வெளி நபராக இருந்தால் கொன்று விடலாம். அருமை புதல்வன் ஆயிற்றே... அடித்தும், திருத்தியும் பார்த்தான். கடும் தண்டனை வழங்கினான். எதற்கும் மசியவில்லை. கடைசியில், 'உன் கடவுள் எங்கே இருக்கிறான் காட்டு' எனக் கேட்டான். பிரகலாதன் வாயிலாகக் கம்பர் சொன்னார். ''அணுவை நுாறு கூறுகளாகப் பிளந்தால் அதற்குக் கோன் என்று பெயர். அதற்குள்ளும் கடவுள் இருக்கிறார்'' என்கிறார். அணுவை நுாறு கூறுகளாக்கினால் அதில் ஒன்றிற்குக் கோன் என்று பெயர். இதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது நம் இலக்கியம். 1974ல் இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜ் ஆப் கேப்ரா. அவர் அணுவிற்குள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் சுழலும் போது அதன் உருவ அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்து புகைப்படத் தொகுப்பாக ஆக்கிய போது வியப்பில் ஆழ்ந்தார். காரணம் அணுவின் சுழற்சி நாம் அன்றாடம் வழிபடும் தில்லை நடராஜரின் தோற்றத்திற்கு இணையாக இருக்கிறது. ஆம். இந்த உலகத்தின் சுழற்சியே நடராஜரின் நாட்டியத்தால் தான் நடக்கிறது என காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 'நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே! அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா' என கண்ணதாசனின் வரிகளை உலகமே அறியும். நடராஜரைச் சுற்றியுள்ள திருவாச்சியைப் பார்த்தால் நெருப்பு வடிவமாக காட்சி தரும். அணுவின் சுழற்சியிலே தான் வெப்பமும் உயிர்ப்பும் உண்டாகிறது என்பதை சொல்லாமல் சொல்லும் செய்தி இது. இந்த உண்மையை உணர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள 'செர்ன்' என்ற அமைப்பிற்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1976ல் ஆறடி உயர நடராஜர் சிலையை பரிசளித்து அதன் முகப்பில் நிறுவச் சொன்னார். நாசா ஆய்வு மையத்திலும் சனாதன தர்மத்தின் அறிவியல் முன்னோடி தானே தான் என நடராஜரின் நடனமாடும் காட்சியைக் காணலாம்.இதை மகாகவி பாரதியார், 'இடையின்றி அணுக்கள் எலாம் சுழலுமென இயல்நுாலார் இயம்பக் கேட்டோம்' எனப் பாடியுள்ளார். அதுபோல எனது மனமும் இயங்காதோ என வேண்டுகிறார் . அவ்வையாரோ மேலும் ஒருபடி மேலே போய் அணுவைப் பிளந்து அதற்குள் ஏழு கடலையும் உள்ளே புகுத்தி விட்டாள். குறளைச் சொல்ல வரும் போது இவ்வாறு தமிழ் மூதாட்டி அவ்வை சொல்வது அறிவியல் உலகமே வியக்கும் செய்தியாகும். வேதங்கள், உபநிடதங்கள், தமிழ்மறைகள், கம்பராமாயணம், அவ்வையார் பாடல் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலை வியக்கச் செய்வது தான் சனாதனம். பஞ்ச பூதங்களையும், அணுவினையும் வியந்த நம் அன்றாட வாழ்வில் சனாதனம் காட்டும் வாழ்வியல் நெறிகளை நோக்கிப் பயணிக்க இருக்கிறோம். அறிவியலாளர்களின் அணுக்கொள்கையும், கண்டுபிடிப்பும் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்றன. ஆனால் சனாதனம் சொன்ன அணுவானது உலகை வாழ வைக்கும்.-தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870