கொலு வைக்கத் தயாராகி விட்டீர்களா ?
வரும் 8ம் தேதி நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகியிருப்பீர்களே! தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். 'யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே எல்லாமுமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல்லாக, பூண்டாக, மரமாக, பொருளாக, எல்லாவித உயிர்களுமாக அவள் விளங்குகிறாள். ஆக, அனைத்துப் பொருட்களிலும் அவளையே காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு 'சிவை ஜோடிப்பு' என்ற பெயரும் உண்டு. 'சிவை' என்றால் 'சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.பொம்மைகளை அடுக்கும் முறை: மனிதனாகப் பிறந்தவன் படிப் படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது மரபு. கொலு வைக்கும் முன்ப வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும்.* முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.* இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். முக்கியமாக நத்தை பொம்மை வைப்பது நலம். நிதானமாக எதையும் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.* மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை பொம்மைகளை வைக்க வேண்டும். உதாரணமாக, எறும்பைப் போல் சுறுசுறுப்பு, கரையான் புற்று, சிலந்தியின் வலையைக் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திட மனப்பான்மைவேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும். இத்தகைய பொம்மைகள் கிடைப்பது அரிதென்பதால், சுயமாக இவற்றை மண்ணாலோ, அட்டைகளிலோ தயார் செய்து கொள்ளலாம்.* நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.* ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.* ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன் களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.* ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து மகான் நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் போன்ற மகான்களின் பொம்மை கடைகளில் கிடைக்கிறது. வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்தும் பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம். * எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள் போன்று கிடைக்கும் பொம்மைகள்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.கொலுமேடைக்கு முன்பாக ஒரு மேஜையிட்டு, நூல் சுற்றிய கும்பத்தில் (ஒரு குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்கும பாக்கெட், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி, கும்பத்தில் வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். அந்த கும்பத்தை அம்பாளாக நினைத்து பூஜை செய்ய வேண்டும். தேவ நிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். கொலு வைக்க நேரம் வரும் 8ம் தேதி நவராத்திரி ஆரம்பமாகிறது. அதற்கு முதல்நாள் அமாவாசையன்றே பொம்மைகளை அடுக்கி விடுவது வழக்கம். எனவே அக்.7 காலை 10.30-11.30 மணிக்குள் நல்ல நேரத்தில் கொலு வைத்து விடலாம். விஜயதசமியன்று (அக்.17) மாலையில் பூஜை முடிந்ததும், பொம்மைகளை படுக்க வைத்து விட வேண்டும். செப்.18 காலையில் கொலுமேடையைக் கலைத்து விடலாம்.