உள்ளூர் செய்திகள்

15 வில்வ மரங்களுடன் சொக்கநாதர் கோயில்

மதுரை ஆதிசொக்கநாதர் கோயிலின் அமைப்பில் இருக்கும் சிவன் கோயில், ராமநாதபுரத்தில் உள்ளது. இங்கு, 15 வில்வமரங்கள் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தல வரலாறு: மதுரையை குசேல பாண்டியன் ஆட்சி செய்தான். ஒருமுறை, தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பர் இடைக்காடர், மன்னனைப் புகழ்ந்து பாடினார். ஆனால், பாண்டியனோ, புலவரைக் கண்டு கொள்ளாமல் அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடர், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சொக்கநாதரை வணங்கி, ''இறைவா! பாண்டிய மன்னன் புலமை மிக்கவன் என நினைத்துப் பாடினேன். ஆனால், அவனோ என்னை அவமதித்து விட்டான்,'' என விண்ணப்பம் செய்து விட்டு, கோபத்துடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டார். உடனே, சொக்கநாதரின் லிங்கவடிவம் மறைந்து விட்டது. வைகை ஆற்றுக்கு தெற்கேயுள்ள கோயிலில் எழுந்தருளி, இடைக்காடருக்கு காட்சியளித்தார். கருவறையிலுள்ள சொக்கநாதரைக் காணவில்லை என்ற விஷயமறிந்த மன்னன், ''சொக்கநாதா! நான் செய்த தவறு என்ன? தாங்கள் எங்கு சென்றீர்கள்?'' என வருந்தி அழுதான். இடைக்காடரை அவமதித்ததால் தான் சிவன் கோயிலை விட்டுச் சென்று விட்டதாக அசரீரி கூறியது. அப்போது வைகையின் தென்கரையில், சொக்கநாதரின் லிங்கவடிவம் எழுந்தருளியிருப்பதை அறிந்து வந்த சிலர் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் அங்கு சென்று, ''சொக்கா!, தாங்கள் இங்கு எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் தவறு ஏதும் செய்தேனா?'' என வேண்டினான். ''பாண்டியனே!, எல்லாத் தலங்களிலும் ஆலவாயான மதுரை உயர்ந்தது. மேலும் யாம் இருக்கும் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் சிறப்பு மிக்கது. இன்று முதல் இந்த தலம் 'உத்தர ஆலவாய்' என்று அழைக்கப்படும். (உத்தரம் என்றால் வடக்கு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கே <உள்ளதால் இந்தப் பெயர்) என்னை 'ஆதிசொக்கநாதர்' என மக்கள் அழைப்பர்,'' கோயிலாக விளங்கட்டும்,'' என்றார். அத்துடன் மன்னனை மன்னித்தருளினார். இந்த வரலாற்றின் அடிப்படையில் அமைந்த ஆதிசொக்கநாதர் கோயிலுக்கு, ராமநாதரபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் அடிக்கடி வந்து வழிபட்டு வந்தார். ஒருநாள், அவரது கனவில் தோன்றிய சிவன், ராமநாதபுரத்திலேயே தனக்கு ஒரு கோயில் அமைக்கும்படி கூறினார். மகிழ்ந்த மன்னர், அங்கேயே ஒரு கோயில் அமைத்தார். மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்று பெயரிடப்பட்டது. தலச் சிறப்பு: இக்கோயில், மதுரை சிம்மக்கல் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் அமைப்பைப் போன்று கட்டப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சிவன் மற்றும் பெருமாளுக்கு சந்நிதி இருக்கிறது. பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சண்டிகேஸ்வரர், சரஸ்வதி, முருகன், லிங்கோத்பவர், நவக்கிரகங்கள், நந்தி, சனீஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர் துர்க்கை ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் 15 வில்வ மரங்கள் உள்ளன. சிவனுக்கு பிரியமான வில்வம், அதிக அளவில் இங்குள்ளதால், இங்கு வந்து சென்றால், நோய்கள் நீங்கிவிடும் என்பர். வில்வத்திற்கு ஆக்சிஜனை கிரகிக்கும் சக்தி அதிகம். எனவே, சுத்தமான காற்றின் மூலம் நோய்கள் நீங்குகின்றன. பிரார்த்தனை : திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியத்திற்காகவும், கல்வி ஞானம் பெறவும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். விருப்பம் நிறைவேறியதும் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருவிழா : பவுர்ணமி, பிரதோஷம். சித்திரை திருவிழா, அஷ்டமி. இருப்பிடம் : ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., திறக்கும் நேரம் : காலை 6 .00-10.00, மாலை 5.00 - இரவு 8.00. போன் : 04567- 223 548, 99423 19434.