உள்ளூர் செய்திகள்

தீபாவளி தீபக்கோயில்

தீபாவளியை ஒட்டி தீபத்திற்கு முக்கியத்துவம் தரும்  கோயில் களைத் தரிசனம் செய்வது நல்லது. விஷ்ணுவின் ராமாவதாரத்தில் அவரது தம்பி லட்சுமணனாக வந்தவர் அவரைத் தாங்கும் ஆதிசேஷன். அந்த ஆதிசேஷன் தன் தலையில் தீபத்தைத் தாங்கி 'நாகஜோதி' என்ற பெயர் கொண்டிருக்கும் தலம் காஞ்சிபுரம்  பச்சைவண்ணர் பெருமாள் கோயிலாகும். இங்கே சென்று வருவோமா!தல வரலாறு: மரீஷி மகரிஷி, மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு விஷ்ணுவின் ராமாவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. 'அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதவடிவில் ராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா?' என பல வகையிலும் கேள்வி கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் விஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், ''நீங்கள்தான் உண்மையில்  ராமாவதாரம் எடுத்தீர்களா? எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல அனுமதித்தீர்கள்? இது உங்களுக்கு தெரியாமல் நடக்குமா? அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா? அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா?'' என தனது சந்தேகங்களை பெரிதாக பட்டியலிட்டார் மரீஷி.அவரிடம், ''நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம் என் மீது அன்பு கொண்டிருந்தவர்களுக்கு அருள்புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன்.தந்தை சொல்லை பிள்ளைகள் மதிக்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகளுக்கு புகுந்தவீட்டில் மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை மனைவி எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும் என குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காக இந்த அவதாரம் அமைந்தது,'' என்றார்.மேலும் அவரது குழப்பத்தைத் தீர்ப்பதற்காக பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார். மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல இவ்விடத்தில் இருந்து மக்களுக்கும் அருள்புரிய வேண்டு மென வேண்டினார். மகாவிஷ்ணுவும் இத்தலத்தில் தங்கினார். 'பச்சைவண்ணர்' என பெயர் பெற்றார். பச்சை வண்ண பெருமாள்: இங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். எனவே, இவரை 'பச்சைவண்ணப் பெருமாள்' என்கின்றனர். மரீஷிக்காக தனியே காட்சி தந்தவர் என்பதால்  கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி கிடையாது. புதன் கிரகத்திற்குரிய நிறம் பச்சை, அவருக்குரிய அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே இவருக்கு பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலுக்கு நேர் எதிரே திவ்யதேசங்களில் ஒன்றான, பவளவண்ணப் பெருமாள் கோயில் இருக்கிறது. இத்தலத்தில் பெருமாள் பவள நிறத்தில் இருக்கிறார். சிவப்பு நிற பவளவண்ணரையும், பச்சை வண்ணரையும் ஒரே நேரத்தில் வழிபடுவது அபூர்வ தரிசனம்.தீபாவளிக்கு தீப வழிபாடு: தாயார் மரகதவல்லி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது பீடத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுவாமி ராமராக காட்சி தந்ததால், தாயாரை சீதையாகவும் வழிபடுகின்றனர். இவள் மகாலட்சுமி, சீதை ஆகிய தாயார்களின் அம்சமாகவும் அருளுவதாக ஐதீகம்.பாற்கடலில் பள்ளிகொண்டிருக் கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷனே, ராமாவதாரத்தில் லட்சுமணராகப் பிறந்தார். தன் மீது அன்புகொண்டிருந்த ஆதிசேஷனை தன் தம்பியாக பிறக்க வைத்து மரியாதை செய்தார் ராமர். இத்தலத்தில் மகாவிஷ்ணு ராமராக மரீஷிக்கு காட்சி தந்தபோது, ஆதிசேஷனால் லட்சுமணனாக மாறமுடியவில்லை. எனவே தன் சுய வடிவத்திலேயே (நாக வடிவம்) இங்கு வந்தார். மகாவிஷ்ணுவிடம் அவரைத் தாங்க தனக்கு வாய்ப்புத் தரும்படி உரிமையுடன் கேட்டார். அப்போது, ஆதிசேஷனின் தலை மீது ஜோதி எழும் வகையில் வாய்ப்பு தந்தார் பெருமாள். இதை 'நாக தீபம்' என்று அழைப்பர். இந்த தீபம் தற்போது மரகதவல்லி தாயார் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் நாகமாக இருக்க அதன் தலைக்குமேலே விளக்கு இருக்கிறது. விளக்கில் ஜோதி வடிவில் பெருமாள் அருளுவதாக ஐதீகம். இந்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாக, புத்திர தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் நாகருக்கு சன்னதியும் உண்டு.திருவிழா: வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி.இருப்பிடம்: காஞ்சி புரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் இக்கோயில் இருக்கிறது.நடை திறப்பு: காலை 8- 11, மாலை 4- 7 மணி.போன்: 044- 2722 9540.