பேச்சுத் திறமை தரும் பாடல்கள்
மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கி திருவாசகம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிதம்பரத்தை சேர்ந்த சிவனடியார் ஒருவர் இலங்கை சென்றார். 'பொன்னம்பலம்' என்று சிதம்பரம் கோயிலை ஜபிப்பது அவரது வழக்கம். இதனால் புத்தபிட்சுகள் அவரை வெறுத்தனர். ஈழ மன்னன், அந்த சிவனடியார் மூலம் மாணிக்கவாசகரைப் பற்றி அறிந்து சிதம்பரத்திற்கு வந்தான். மன்னனுடன் பிட்சுகளும், அவனது மகளும் வந்தனர். அவள் பேசும் சக்தியற்றவள். மாணிக்கவாசகரைத் தோற்கடித்து, சிதம்பரத்தில் புத்தமதத்தின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என்பது மன்னனின் நோக்கமாக இருந்தது. மாணிக்கவாசகரும் புத்தகுருமார்களும் வாதத்தில் ஈடுபட்டனர். நடராஜப் பெருமான் மாணிக்கவாசகரின் பெருமையை நிலைநாட்ட திருவுள்ளம் கொண்டார். புத்தபிட்சுகளை பேசவிடாமல் செய்துவிட்டார். ''பிட்சுகளின் பேசும் சக்தியை இழக்கச் செய்த நீங்கள், பேசும் திறனற்ற என் மகளை பேசவைத்தால் நான் இந்த நடேசனுக்கு அடிமையாகிவிடுவேன்'' என்றான் மன்னன். மாணிக்கவாசகர் நடராஜர் மீது 'திருச்சாழல்' என்னும் பாடல் பாடி அப்பெண்ணையும், புத்தபிட்சுகளையும் மீண்டும் பேசவைத்தார். சைவத்தின் பெருமையை நிலைநாட்டினார். பேச்சுத்திறமை இல்லை என வருந்துபவர்கள் திருவாசகத்திலுள்ள திருச்சாழலைப் படிக்கலாம்.