கண்ணாடி நடராஜர்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், மார்கழி திருவாதிரையன்று கண்ணாடியில் தெரியும் நடராஜருக்கு பூஜை செய்வார்கள். இதை 'அருவ வழிபாடு' என்கின்றனர். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகள் அடக்கம். இவர்கள் சிதம்பரத்திலிருந்து இங்கு வந்திருந்தனர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் தினமும் நடராஜரின் நடனக் காட்சியைக் கண்டபிறகே, உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை சாப்பிட பெண்வீட்டார் அழைத்தனர். ''ஐயா! நாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம். இன்று அதற்கு வசதியில்லை. எனவே நாங்கள் உண்ணுவதாக இல்லை,'' என்றனர் இதை சிவபெருமான் கேட்டார். அந்த மகரிஷிகளுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இதைத் தரிசித்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதக்கலை மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது. ''ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்! அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்!'' என நினைத்தவன், நடராஜர் சந்நிதிக்குச் சென்றான்.''பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!'' என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலதுகாலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சந்நிதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாறி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.வட்டக் கண்ணாடியில் நடனம்:சிவபெருமான் ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவமில்லாமை), அருவுருவம் (லிங்கம்) என மூன்றுவடிவங்களில் அருளுகிறார். இதில் ரூபம் என்பது நடராஜர் வழிபாட்டையும், அருவுருவம் என்பது லிங்க வழிபாட்டையும், அரூபம் என்பது வடிவமில்லாமல் வணங்குவதையும் குறிக்கும். பொதுவாக, அருவுருவ (லிங்கம்) வடிவில்தான் சிவன் காட்சி தருவார்.மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரத்தின் போது, இந்த மூன்று வடிவங்களையும் தரிசிக்கலாம். இந்நாட்களில் சுந்தரேஸ்வரர் சந்நிதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்திற்கு நடராஜர் எழுந்தருளுகிறார். அங்கு தெற்கு நோக்கி நடராஜரை வைத்து, எதிரே அவரது பிம்பம் விழும்படியாக ஒரு வட்டக் கண்ணாடியை வைக்கின்றனர். அன்று அதிகாலையில் பூஜை நடக்கும்போது நடராஜர் (ரூபம்), கண்ணாடியில் தெரியும் பிம்ப நடராஜர் (அரூபம்), மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் (அருவுருவம்) ஆகிய மூவருக்கும் தீபாராதனை செய்யப்படுகிறது. சிவன் பாதம்:சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். நடராஜர், இடது காலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பார். அந்த திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், சிவபாதத்தை தரிசிக்கிற பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கிறது. பஞ்சசபை நடராஜர்:மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜர் தவிர, பிரகாரத்தில் மேலும் நான்கு சபைகள் உள்ளன. அதாவது, ஒரே கோயிலில் ஐந்து சபைகளும் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். திருவாலங்காடு (ரத்தினசபை), சிதம்பரம் (பொன்னம்பலம்), திருநெல்வேலி (தாமிரசபை), குற்றாலம் (சித்திரசபை) ஆகிய கோயில்களில் அருளும் நடராஜர் வடிவங்கள் இங்கு உள்ளன. ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையின்போது இவர்கள் நால்வரும் நூற்றுக்கால் மண்டபத்திலுள்ள நடராஜர் சந்நிதிக்கு எழுந்தருளுகின்றனர். பெரிய மூர்த்தி:தமிழகத்தின் பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். இவர், பத்து கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள். சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். அபிஷேகம் இல்லை:வெள்ளியம்பல நடராஜருக்கு சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. அபிஷேகம் செய்வதில்லை. உற்சவருக்கு சந்தனாதி தைலத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம்.போன்:0452 234 9868.