உள்ளூர் செய்திகள்

பார்வை தரும் பகவதி

கண்ஒளி, ஆரோக்கியம் மற்றும் செல்வவளம் தரும் அம்மன் என்று அழைக்கப்படும் 'நெல்லிக்காட்டு பகவதி', கேரள மாநிலம் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டில் அருள்பாலிக்கிறாள். மருந்தைப் பிரசாதமாக தரும் கோயில் இதுமட்டும் தான்.பழமையான கோயில்:ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லிக்காட்டு மனா என்ற வீட்டில் வசித்த, பழமையான நம்பூதிரி குடும்பத்து ஆயுர்வேத வைத்தியர்களால் உருவாக்கப்பட்டது இந்தக் கோயில். அவர்கள் வழிவந்த நம்பூதிரி குடும்பத்தினரே, இப்போதும் பூஜை செய்கின்றனர். இக் கோயில் வளாகத்தில், 'மருத்துவத்திற்கான தெய்வம்' என வணங்கப்படும் தன்வந்திரி மூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது.சிறப்பம்சம்:கடின நோய்கள் கூட, இந்தக் கோயிலில் தரும் மருந்து பிரசாதம் மூலம் குணமாகி விடுகிறது. பூர்வஜென்ம நோய்கள் தீரவும், பாவதோஷம் நீங்கவும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். ஜாதகதோஷங்கள் இந்த அம்மன் அருளால் நீங்கி, நோய்கள் காணாமல் போகும் என்பது இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை.கோயிலும் மருத்துவமனையும்:நெல்லிக்காட்டு மனா நம்பூதிரி குடும்பத்து டாக்டர்களால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை கோயில் அருகில் உள்ளது. அம்மனுக்கு பூஜை செய்த பின்பே சிகிச்சை துவங்குகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாங்கிய மருந்தை அம்மன் முன் வைத்து பூஜை செய்த பின்பே கொண்டு செல்கின்றனர். மருந்து பிரசாதம்:கோயில் நிர்வாகி என்.பி.நாராயணன் நம்பூதிரி கூறுகையில்,''மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல்வேறு ஆயுர்வேத பாரம்பரிய மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து அபூர்வ 'மருந்து பிரசாதம்' தயார் செய்யப்படுகிறது. பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் வீட்டில் சுத்தமாக வைத்து, தினமும் அருந்த வேண்டும். 41 நாட்கள் தொடர்ந்து அருந்தினால், பூர்வ ஜென்ம தோஷம் நீங்கி, நோய்கள் குணமாகி விடும். மீண்டும் நன்றியோடு அம்மனை வழிபட வரும் பக்தர்கள் தான் அதிகம்,'' என்றார். ஞாயிறு தோறும் 'நோய் தீர்க்கும் சிறப்பு பூஜை' நடக்கிறது. இதற்கு கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும்.தங்க மருந்து சேவை:தினமும் மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் 'சிறப்பு மருந்து சேவை' நடக்கும். நவராத்திரி நாட்களில், தங்கம் கலந்த மருந்து பிரசாதமாக வழங்கப்படும். மாசி மாத ஆண்டு திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.திறக்கும் நேரம்:காலை 5-10 (செவ்வாய், வெள்ளி 11மணி வரை), மாலை 5-இரவு7.30.இருப்பிடம்:கோட்டயம்-அங்கமாலி பாதையில் 38 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ.,(கூத்தாட்டுக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து 1.5 கி.மீ.,)போன்: 09447 875067, 09496 134500.- ஜி.வி.ஆர்.