உள்ளூர் செய்திகள்

தை ரதசப்தமிக்கு தயாராகும் குட்டஹள்ளி வீரபத்திரர்

பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில் 32 கரங்களுடன் கூடிய வீரபத்திரரைத் தரிசிக்கலாம். தை மாத ரதசப்தமி விழா இங்கு கோலாகலமாக நடக்கும். தல வரலாறு: சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர், 32 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்து, யாககுண்டத்தை அழித்து, யாகத்தின் பலனை ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார். இதன் அடிப்படையில் 32 கைகளுடன் 'பிரளயகால வீரபத்திரர்' சிலை வடித்து, கோயில் எழுப்பப்பட்டது.காலப்போக்கில் இந்தக் கோயில் அழிந்து விட்டது. சிலையும் மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில், இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு புதரின் மத்தியில் பேரொளி வீசியதைக் கண்டான். புதரை விலக்கியபோது, 32 கை வீரபத்திரர் சிலை கிடைத்தது. அச்சிலையை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோயில் எழுப்பினான். தலப்பெருமை: செவ்வாய்க்கிழமைகளில் வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாயன்று, தேங்காய்த்துருவலால் அலங்காரம் செய்வது விசேஷம். வீரபத்திரர் உக்கிரமாக இருப்பதால், சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.உமா மகேஸ்வரர்: சுவாமி சந்நிதி வலப்புறமுள்ள குன்றில், வீரஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். வீரபத்திரர் சன்னதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலிங்கம், பார்வதி மற்றும் விநாயகருக்கும் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தருகிறார். வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி உள்ளது.ரதசப்தமி : தை மாதம் ரத சப்தமி சப்தமிக்கு முதல்நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் ஏற்றுவர். அர்ச்சகர்கள் இருவர் மற்றும் வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர். அதில் தூபமிட்டு வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர். அதன்பின் மூவரும் பூக்குழி இறங்குவர். ரதசப்தமியன்று வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு தேரில் உலா வருவார். வரும் பிப்ரவரி 9, 10ல் ரதசப்தமி விழா நடக்கிறது.இருப்பிடம்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ., தூரம். ராமகிருஷ்ண ஆஸ்ரமம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஐந்து நிமிட நடையில் கோயிலுக்குச் சென்றுவிடலாம்.திறக்கும் நேரம் : காலை 8-11 மணி, மாலை 6- இரவு 8 மணி.