""ஹரி அவ்டியோ - டிச.21 நடனகோபால நாயகி அவதார தினம்
நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகில் உள்ள பால்மால் குறுக்குத் தெருவில், 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது பெற்றோர் ரங்கார்யர், லட்சுமிபாய். பெற்றோர் இட்ட பெயர் ராமபத்ரன். பள்ளிப்பருவத்தில், 'ஓம்' என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களைத் திணறடித்தார். அவரது மனம் எப்போதும் ஆன்மிக சிந்னையிலேயே இருந்தது. பத்து வயதில் கடையில் கணக்கெழுதும் பணிக்கு சேர்ந்தார். ஆனால், கடைக்காரர் ராமபத்ரனின் ஆன்மிகசிந்தனையைக் கண்டு வேலையை விட்டு நீக்கினார். பின்னர் குலத்தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். 16 வயதில் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றம் மலையில் யோகசாதனையில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்குப் பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் தீட்சை பெற்று 'சதாநந்தர்' என்று பெயர் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். ஆழ்வார்களின் மீது ஈடுபாடு கொண்டார். நம்மாழ்வாரின் அவதாரத்தலமான ஆழ்வார்திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை உருக்கியது. அவர் அந்த பக்தரின் கால்களில் சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி வேண்டிக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதாநந்தருக்கு, 'நடனகோபால்' என்று தீட்சாநாமம் இட்டார். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணுபுராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்றார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி வழிபடத் தொடங்கினார். பின்பு, திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றார். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை 'நடனகோபால நாயகி' என்று அழைத்தார். தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே அறிந்து மதுரை அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தாவனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்''ஹரி அவ்டியோ''(பகவான் ஹரி வந்து விட்டார்) என்று உரக்கச் சொல்லியபடியே இறைவன் திருவடியில் கலந்தார். அன்றுமுதல் நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவர் பிரபந்தப் பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை எழுதியுள்ளார். 'ஸ்ரீமதே ராமானுஜா' என்று ஜெபித்து வந்தால், மனதில் இருக்கும் தீயஎண்ணங்கள் நீங்கும் என்று தன் கீர்த்தனைகளில் குறிப்பிட்டுள்ளார். 'ராமானுஜரின் உரைகளையும், உபதேசங்களையும் நாம் படிக்கவேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பிருந்தாவனக்கோயிலில் சுவாமிகள் வழிபட்ட உபாசனா மூர்த்தியான ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகங்கள் உள்ளன. இவர் ஆண்டாள் கொண்டையிட்டு, துளசிமணிமாலை அணிந்திருப்பார். பாதுகையை (காலணி) பயன்படுத்தினார். அவை பிருந்தாவனத்தில் உள்ளன. பக்தர்கள் அவற்றைத் தரிசிப்பதைப் பாக்கியமாகக் கருதுகின்றனர். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது. -கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி