உள்ளூர் செய்திகள்

கல்வித்தெய்வம் ஹயக்ரீவர்

ஆக.25 ஹயக்ரீவர் ஜெயந்திபுதுச்சேரி முத்தியால்பேட்டையிலுள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஆவணி திருவோண தேர்த்திருவிழா ஆக.25ல் நடக்கிறது. ஒருமுறை திருமாலின் தொப்புளில் மலர்ந்த தாமரை இதழில் விழுந்த நீர்த்திவலைகள் மது, கைடபர் என்னும் அசுரர்களாக மாறினர். இருவரும் பிரம்மாவின் வேதங்களை அபகரித்தனர். அதன் பின் குதிரையாக மாறிய அவர்கள் பாதாள உலகை அடைந்து வேதங்களை மறைத்தனர். பிரம்மா திருமாலைச் சரணடைய, திருமால் ஒரு குதிரையாக மாறி போரிட்டு வேதங்களை மீட்டார். குதிரை முகம் கொண்டவர் என்னும் பொருளில் 'ஹயக்ரீவர்' என பெயர் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் கோயில் உருவாக்கப்பட்டது. ஆவணி திருவோண நன்னாளில், குதிரை முகத்துடன் இருந்த திருமால் வேதங்களை உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார். இதனடிப்படையில் இந்த நாள் ஹயக்ரீவ ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. வேதங்களை மீட்டவர் என்பதால் கல்வி தெய்வமாக ஹயக்ரீவர் போற்றப்படுகிறார். இடது மடியில் லட்சுமி தாயாரை ஹயக்ரீவர் தாங்கியிருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர சிறப்பு பூஜை நடத்துகின்றனர். ஹயக்ரீவர் வலது கண்ணால் பக்தர்களையும், இடது கண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் இருப்பது சிறப்பு. படிப்பில் சிறக்கவும், பேச்சு மற்றும் எழுத்துத்திறன் வளரவும் மாணவர்கள் இங்கு வழிபடுகின்றனர். திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர், செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்களுக்கு அருகில் இத்தலம் உள்ளதால் மூன்று கோயில்களையும் பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.ஆந்திராவின் அகோபிலம் நரசிம்மருக்கு சன்னதி இங்குள்ளது. இங்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் படைக்கப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கும் கோமளவல்லி தாயாரின் அருள்பெற்ற வைணவ ஆச்சாரியார் லட்சுமிகுமார தாத்த தேசிகருக்கு சன்னதி உள்ளது. ராமாயணத்தை வாழ்நாள் முழுவதும் பாராயணம் செய்து அனுமனை நேரில் தரிசித்தவர் இவர்.எப்படி செல்வது: புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., விசேஷ நாட்கள்: ஆவணி திருவோணத்தில் பிரம்மோற்ஸவம், நரசிம்ம ஜெயந்திநேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 6:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0413 - 226 0096அருகிலுள்ள தலம்: 20 கி.மீ., துாரத்தில் திருவஹீந்திரபுரம் தேவநாதசுவாமி கோயில்