கலைகளின் நாயகி - கலைவாணி
கல்விக்குரிய தெய்வமாக சரஸ்வதியைப் போற்றுகிறோம். முப்பெருந்தேவியரில் சரஸ்வதியைக் கலைமகள் என்று குறிப்பிடுவர். கலைகளை ஆயகலைகள் 64 என்று எண்ணிக்கையில் வரையறை செய்துள்ளனர். படிப்பு மட்டுமல்லாமல் அனைத்து கலைகளும் இதிலடங்கும். அதனால் சரஸ்வதியை புலவர்கள் கலையோடு தொடர்புபடுத்தி பல பெயர்களால் வணங்கி மகிழ்ந்தனர். கலை ஓதும் மலர் மாது, கலைக்கொடி, கலைஞானத் தோகை, கலை ஞானவல்லி, கலை ஞானாம்பிகை, கலை மடந்தை, கலைமான், கலைப் பெருமாட்டி, கலை மின்னாள், கலையணங்கு, ஆயகலைப்பாவை, கலைஞானவல்லி, கலையரசி, கலையம்மா, கலாராணி, கலாசுந்தரி, கலைவாணி, கலைச்செல்வி, கமலவல்லி, வெண்கமல நாயகி, வெண்டாமரைச் செல்வி, வெண்கமல பனுவலாட்சி ஆகிய திருநாமங்களால் கலைமகளைத் துதித்து வந்தனர். ஆனால் குழந்தைகளுக்கு, சரஸ்வதிக்குரிய சில பெயர்களேவைக்கப்படுகின்றன. ***வெள்ளை மனம்! பிள்ளை குணம்!! வெள்ளைத் தாமரைப் பூவில் விரும்பி உறைபவள் கலைமகள். அவளுக்குரிய வாகனம் வெண்ணிறப் பறவையான அன்னம். உடுத்தும் ஆடை வெள்ளைப் புடவை. கையில் ஏந்தியிருக்கும் முத்துக்களால் ஆன ஜபமாலையும் வெள்ளை. இப்படி சரஸ்வதியைக் காணும் போது வெள்ளை நிறம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கலைபயில வேண்டுமானால் நம் உள்ளம் வெண்மையாக இருக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். உள்ளத்தூய்மையோடு கற்பவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்காக வெண்மை நிறத்தை சரஸ்வதிக்குரியதாக வைத்தனர். ''வெள்ளை மனம் பிள்ளை குணம்'' என்று குறிப்பிடுவர். வெள்ளை மனம் கொண்டவர் அனைவருமே கலைமகளின் பிள்ளை களே. கள்ளம் கபடம் இல்லாதவர்கள் எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் அறிய ஆவல் கொள்வர். ஆராய்ச்சியுடன் பல கேள்விகள் கேட்டு விளக்கம் பெறுவர். வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளும் வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு வேண்டிய ஞானத்தை வாரி வழங்குகிறாள். ***நாளும் வீணை வாசிக்கிறாள்! சரஸ்வதிதேவிக்கு கையில் இருக்கும் வீணையே அடையாளம். அவளுடைய மரகத வளைக்கரம் நாளும் இடைவிடாது வீணையை வாசித்துக் கொண்டிருக்கிறது. கல்வி கரையில்லாதது. எப்போதும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை சரஸ்வதியின் வீணை நமக்கு காட்டுகிறது. வீணை கற்பவர்கள் வீணை வாசிப்பதில் எவ்வளவு திறமையுடையவராக இருந்தாலும், நாளும் பயிற்சி எடுத்துக் கொள்வர். பயிற்சி இல்லாமல் என்றோ ஒருநாள் எடுத்து வாசித்தால் அதில் ஸ்வரம் சுத்தமாக வராமல் தப்பிவிடும். அதனால், கல்வி, கலை பயில்பவர்கள் நாளும் பயிற்சி எடுத்தல் வேண்டும். அதைத் தொடங்கும் நன்னாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கலைபயிலத் தொடங்குவது வழக்கம்.