அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அவ்வையின் பொன்மொழி வீணா?
* உலகில் பிறந்த அனைவருமே மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர். நல்ல உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள், மற்ற வாழ்வியல் தேவைகள் அனைத்தும் தேவைப்படுகின்றன. இவற்றைப் பெற கல்வியறிவு, தகுந்த பயிற்சி, முயற்சி ஆகியவை உதவுகின்றன. * மாணவப் பருவத்தில் செய்யும் சிறு தவறு கூட எதிர்காலத்தைப் பாதித்து விடும். சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கும் மாணவன், தன் கடமையிலிருந்து தவறும் போது, சமுதாயம் புறக்கணிக்கும் ஒருவனாக மாறி விட நேரிடும்.* அறிவைப் பெறும் தாகம் கொண்டவனே நல்ல மாணவன். பசி உணர்வு எழும்போது செரிமான சக்தி அதிகரிப்பது போல, கற்கும் ஆர்வத்திற்கேற்ப அறிவும் மாணவனிடம் அதிகரிக்கும். * செல்வம், அதிகாரம் என்னும் எந்த குறுக்குவழியாலும் பெற முடியாதது அறிவு. காப்பியடித்தோ, திருட்டுத்தனம் செய்தோ பட்டம் பெறலாம். பதவிக்கு வரலாம். ஆனால், பதவிக்கு வந்த பின் அதை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டிவரும்.* மனித வாழ்வில் பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது. அதைச் சமாளித்து வெற்றி பெற விடாமுயற்சியும், நேர்மையான கல்வி அறிவும் வேண்டும்.* ஒரு ஆசிரியர் பாடங்களைக் கற்றுக் கொடுத்தால் போதாது. தகுந்த ஆலோசனை அளித்து மாணவர்களின் சுயமுயற்சியையும், தேடுதல் திறனையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.* ஆசிரியர்- மாணவர் உறவு வகுப்பறையோடு நின்று விடக் கூடாது. குருகுலக்கல்வியில் இருந்ததுபோல, மாணவர்களைச் சொந்தப்பிள்ளைகளாக எண்ணி கல்வி புகட்ட வேண்டும்.* சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு குடும்பம். குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடு தான். பெற்றோரே குழந்தையின் முதல் ஆசிரியர்கள்.* குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் பயிற்சியும், மனதில் பதியும் கருத்துக்களும் தான், வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும். பெற்றோர் இதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.* பழங்காலத்தில் பெற்றோரைத் தெய்வமாகப் போற்றும் மரபு சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றனர். தற்போது இந்தநிலை மாறி வருகிறது. பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதில்லை. 'பிள்ளைகள் எங்களை மதிப்பதில்லை' என்று பெற்றோர் புகார் சொல்கின்றனர். பிள்ளைகளோ, 'பெற்றோர் எங்களைப் புரிந்து கொள்வதில்லை' என்று புலம்புகின்றனர். இந்த 'தலைமுறை இடைவெளி' யால், வீடு என்பது இனிய இல்லமாக இல்லாமல் விடுதியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வருந்துகிறார் ஹர்ஷானந்தர்