உள்ளூர் செய்திகள்

கந்த சஷ்டி கவசம் - அரங்கேறிய தலம்

கந்தசஷ்டி கவசம் ஒலிக்காத இடமே இல்லை. இதைப் பாடுவோருக்கு முருகப்பெருமான் பாதுகாப்பு தருவார். அந்தக்கவசம் எங்கே அரங்கேறியது தெரியுமா? ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில். தல வரலாறு: அனந்தன் என்ற நாகார்ஜூனனுக்கும், வாயுதேவனுக்கும் பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பருவத்தை பிடித்துக் கொள்ள, வாயுதேவன் காற்றை கடுமையாக வீசி, மலையை விடுவிக்க முயன்றான். அப்போது மேருவின் சிகரப்பகுதிகள் முறிந்து பல இடங்களில் விழுந்தது. அதில் ஒரு பகுதியே சென்னிமலை. நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் 'பெரும்வெளிர்' என்ற பெயரிலான குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் வைத்திருந்த பண்ணையார்களிடம் வேலைபார்த்தனர். அதில் ஒரு பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை வேலையாள் கவனித்து, பண்ணையாரிடம் கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டு, மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டி பார்த்த போது, ஒரு கற்சிலை கிடைத்தது. அதன் முகம் மட்டும் அழகாகவும், இதரபகுதிகள் கரடு முரடாகவும் இருந்தது. ஒரு சிற்பியிடம் அதைச் சரி செய்யச் சொன்னார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. உடனே பணியை நிறுத்திவிட்டனர். அந்தச்சிலையை சென்னிமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்தனர். 'தண்டாயுதபாணி' என பெயர் சூட்டப்ட்டது. பிற்காலத்தில், சிவாலயச் சோழ மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்க முருகப்பெருமான் அருளினார். இதையடுத்து அவர் மலையில் கோயில் கட்டினார். மலையிலுள்ள முருகனுக்கு 'சென்னிமலை ஆண்டவர்' என்று திருநாமம் சூட்டப்பட்டது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது. சிறப்பம்சம்: விநாயகருக்கு பூஜை முடிந்த பிறகே, மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடப்பது வழக்கம். ஆனால், இங்கு முருகப்பெருமானுக்கு பூஜை முடிந்த பின்பே சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. பழத்தால் கோபித்து மலை மேல் இருப்பதால், விநாயகர் தன் தம்பியைச் சமாதானம் செய்ய அவருக்கு முன்னுரிமை கொடுத்தாராம். சகோதரர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே, இவ்வாறு செய்யப்படுகிறது. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்: ''துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசம் தனை''... என்று முருக பக்தர்கள் மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்வதை காணமுடியும். இந்த கவசத்தை இயற்றிய ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள் காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தராக இருந்தார். கந்தசஷ்டி கவசத்தை எழுதிய இவர் அதை அரங்கேற்றம் செய்ய உகந்த இடத்தைக் காட்டுமாறு முருகனை நினைத்து வழிப்பட்டார். சென்னிமலையே <உயர்ந்த தலம் என்ற உணர்வு ஏற்பட்டது. அங்கேயே அரங்கேற்றினார். சென்னிமலை ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கந்தர் சஷ்டி கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற புகழ்மிக்க வரியையும் தந்துள்ளார். சிரம் என்றால் 'சென்னி' (தலை). 'கிரி' என்றால் 'மலை'. மலைகளில் எல்லாம் தலையாய மலை என்பதால் இப்படி பெயர் சூட்டியுள்ளனர். வளர்பிறை சஷ்டி திதிகளிலும், ஐப்பசி கந்தசஷ்டி திருவிழாவின் ஆறு நாட்களும் பக்தர்கள் விரதமிருக்கின்றனர். குழந்தை வரத்துக்கு மிக <உகந்த கோயில் இது. மூலவரைச் சுற்றி எட்டு கிரகங்களை அமைத்து, நடுவில் முருகன் இருக்கிறார். அவரை செவ்வாய் கிரகமாக கருதுகின்றனர். பின்நாக்கு சித்தர்: பின்நாக்கு சித்தர் என்பவர் வாழ்ந்து முக்தி அடைந்த தலம். இவருடைய இயற்பெயர் தன்னாச்சி அப்பன் சித்தர். ''இறை நம்பிக்கையை மறுப்பவர்களின் நாக்கு புண் நாக்கு,'' என்று கூறியதால் 'புண்நாக்கு சித்தர்' என்ற பெயர் இருந்தது. நாக்கினை பின்பக்கமாக மடித்து அருள்வாக்கு வழங்கி வந்ததால் பின்நாக்குச் சித்தர் எனவும் பெயர் பெற்றார். அவர் தவமிருந்த குகை இப்போதும் உள்ளது. சென்னிமலை தலபுராணம் பாடிய சரவண மாமுனிவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார். காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கு சந்நிதி உள்ளது. வீடு கட்ட, திருமணம் நடத்த, வியாபாரம் செய்ய, தொழில் துவங்க, வியாதிகள் தீர முருகனிடம் சிரசுப்பூ உத்தரவு கேட்கின்றனர். தவக்கோல தேவியர்: மூலவர் சந்நிதியில் முருகப்பெருமான் தனித்துள்ளார். வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு முருகன் சந்நிதிக்கு பின்புறம் நூறு படிகளை கடந்து செல்ல வேண்டும். அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் சென்னிமலை ஆண்டவரைத் திருமணம் செய்ய தவம் செய்யும் காட்சியை இங்கு காணலாம். வள்ளி, தெய்வானை திருவுருவங்கள் ஒரே கல்லில் பிரபையுடன் வடிக்கப்பட்டுள்ளது. பொதிகாளையில் தீர்த்தம்: சென்னிமலை ஆண்டவருக்கு அடிவாரத்திலிருந்து திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தம் இரண்டு பொதிகாளைகள் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது.1984, பிப்ரவரி 12ல் இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயமும் இங்கு நடந்தது.திறக்கும் நேரம்: காலை 6- இரவு 8 மணி.இருப்பிடம்: ஈரோடு- தாராபுரம் ரோட்டில் 28 கி.மீ., தூரம். அடிவாரத்தில் இருந்து 1320 படிகள் ஏற வேண்டும். அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு பஸ் உள்ளது. தூரம் 4 கி.மீ., தற்போது கோயிலில் திருப்பணி நடக்கிறது.போன்: 04294- 250 223, 04294- 250 263.