ஒன்றே குலமென்று பாடுவோம்
* அன்பால் மனதை அலங்கரித்தால், அகிலம் முழுவதையும் நம்மால் அரவணைக்க முடியும். * ஒருவரை மன்னிப்பதில் இருக்கும் இன்பம் பழிவாங்கும் உணர்வில் இருப்பதில்லை.* பாவத்திற்கெல்லாம் தாய் வறுமையே. வறியவனிடம் பாவ புண்ணியத்தைப் பற்றிய பேச்சு எடுபடாது.* 'கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்' என்று பழிக்குப் பழி வாங்கும் குணம் நல்லதல்ல.* சோதனை நேரும் போது தான் மனிதன் பொறுமை, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* கொல்லாமை மட்டுமே அகிம்சை என்று நினைக்கிறோம். எல்லா நல்ல செயல்களும் அகிம்சையில் தான் அடங்கும்.* செல்வம் அதிகம் சேரும்போது மனிதன் பண்பு, தரம் குறைந்தவனாகி விடுகிறான்.* பணம் சக்கரம் போல சுழன்று வரும் இயல்பு கொண்டது. எனவே, அதனை தர்ம வழியில் செலவிடுவதே அறிவுடைமை. பதவி, அதிகாரம், அந்தஸ்து என்று வாழ்வின் எந்த உயர்ந்த நிலைக்கும் இக்கருத்து பொருந்தும். * ஒருவன் வாழும் வாழ்க்கை அவனுக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்.* கட்டாயத்தின் பேரில் செய்யும் உதவியைத் தொண்டு எனக் கூற முடியாது. மனம் உவந்து செய்வதே தொண்டு.* பொருள் இல்லாதவர்களும் தொண்டாற்ற முன் வரலாம். அவரவர் தகுதிக்கு உட்பட்ட நற்செயல்களை அவர்கள் செய்யலாம். * மனிதகுலம் முழுவதும் ஒன்றே. இதைத்தான் 'உலகமே ஒரு சிறிய கிராமம்' என்றார் ஆங்கிலக்கவிஞர் கோல்ட்ஸ்மித். நமக்கு கடவுளும் ஒருவனே. இந்த உணர்வை நாம் பெற்று விட்டால் உலகம் நன்மை பெறும்.* பிறருக்கு நன்மை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவற விட்டு விடாதீர்கள்.* ஏழைக்குக் கடன் கொடுத்தவன் கடவுளுக்கே கடன் கொடுத்தவன் ஆகிறான். அவனுக்கு ஆண்டவன் அவற்றைப் பல மடங்கு திருப்பிக் கொடுப்பான் என பைபிள் வலியுறுத்துகிறது.* மற்ற மனிதர்களிடமும், உயிர்களிடமும் கருணை காட்டுபவன் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்.* வாழ்வில் மனிதநேயத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெற்று மகிழ்வார்கள்.* நாம் ஒருவருக்கொருவர் துணையாக வாழ வேண்டுமே தவிர, யாருக்கும் தொந்தரவு தருபவர்களாக இருக்கக் கூடாது.* பண்புகளின் மணிமுடியாகத் திகழ்வது மனிதநேயம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டால் மனதில் மனிதநேயம் மலரத் தொடங்கி விட்டது என்று பொருள்.* மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிந்தனை ஆற்றல் உண்டு. அதைச் சரியான வழியில் செலுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் பணி.ஒற்றுமைக்கு வித்திடுகிறார் கமலாத்மானந்தர்