நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா!
* கடவுளை தாய், தந்தை, குழந்தை, நண்பன் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வழிபட்டாலும், தாயாக வழிபடுவதே எளிதாகும். இதன் மூலம் குழந்தையைப் போல, அவருடன் நெருங்கி உறவாட முடியும். * மன ஒருமையுடன் உள்ளம் கரைந்து உருகினால், கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும். * தளராத மனஉறுதி, நன்னடத்தை, தூய்மை, நம்பிக்கை இவையே ஆன்மிகத்தில் உயர்வு பெறுவதற்கான வழிமுறைகள்.* ஏற்றுக்கொண்ட கொள்கையில் துன்பம் நேரிட்டாலும், உயிரே போக நேர்ந்தாலும் குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல், அதை நிறைவேற்றிய தீர வேண்டும்.* உயிர் வாழ உணவு அவசியம் போல சுதந்திரமாக வாழ்வதற்கு தியாக உணர்வு அவசியம்.* மற்றவர்களின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்பவன் மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும்.* உண்ணும் உணவுக்கு ஏற்ப மனிதனின் குணம் அமைகிறது. சாத்வீகமான உணவு நல்ல பண்புகளை வளர்க்கும். * மனிதருக்குரிய அடிப்படையான குணம் அன்பு. அன்பில்லாதவன் வாழ்வதில் அர்த்தமில்லை. * சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து இறைவன் சிரிப்பான். உயர்வு தாழ்வு கருதி யாரையும் இழிவாக நினைப்பது கூடாது.* துக்கப்படுவதால் வாழ்வின் எந்தப் பிரச்னையும் தீர்ந்து விடப்போவதில்லை. மாறாக பிரச்னையின் தாக்கம் தான் அதிகமாகும்.* துன்பத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுகத்தின் அருமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். உயிர் உள்ள வரை அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும். நாம் வளர்வதோடு அறிவையும் வளர்த்துக் கொள்வதே உண்மையான வளர்ச்சி.* கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டவன் எச்செயலிலும் சாதனை புரிய முடியும். * கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் குடும்பவாழ்விலும் சரி, சமுதாயவாழ்விலும் சரி.. வளர்ச்சியைக் காண முடியாது.* நீதியுணர்வே வாழ்வின் ஜீவநாடியாக இருக்கிறது. அதனால் நீதியை நிலைநாட்ட நம்மால் இயன்றதைச் செய்ய முற்பட வேண்டும்.* சுதந்திரம் இல்லாத மனிதன் உயிர் இல்லாத உடலைப் போன்றவன்.* பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதனால் யாருக்கும் அவமானம் இல்லை. * பிறருக்கு உபகாரம் செய்வது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி. பரோபகாரம் செய்வதில் யாரும் அலுத்துக் கொள்ளக்கூடாது. * நியாயமற்ற ஆசை மனதில் எழும் போதே அதை வளர விடாமல் கிள்ளி எறிந்து விட வேண்டும். இதில் தாமதிப்பது ஆபத்தில் முடிந்து விடும்.* தர்மத்திற்கு முரண்படாத நல்ல விருப்பங்கள் அனைத்தும் கடவுளுக்கு உகந்தவையே. அதை அடைய முயல்வதில் தவறொன்றும் இல்லை.* ஒரு தீய எண்ணம் பல தீய எண்ணங்களுக்கு வழி வகுத்து விடும். அதனால், மனம் என்னும் கோட்டையில் பகைவரின் படைகள் நுழைய அனுமதிக்காதீர்கள்.தைரியம் தேவை என்கிறார் நேதாஜி