உள்ளூர் செய்திகள்

மகாகணபதி மடியில் கிருஷ்ணர்

விநாயகரை பல கோலங்களில் தரிசனம் செய்திருப்பீர்கள். விநாயகரின் மடியில் அவரது மாமனான கிருஷ்ணர் இருக்கும் கோலத்தை நீங்கள் பார்த்ததுண்டா! இல்லை என்றால் கேரளாவிலுள்ள கோட்டயம் மள்ளியூர் மகாகணபதி கோயிலுக்கு வாருங்கள். சங்கரன் நம்பூதிரி என்பவரின் முன்னோர் இங்கு மகாகணபதி சிலையை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தனர். பின்னர் ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனையைச் சேர்ந்த குடும்பத்தினரின் பராமரிப்பில் கோயில் இருந்தது. காலப்போக்கில் இக்குடும்பத்தினர் வறுமைக்கு ஆளாகவே வழிபாடு நின்று போனது. பிற்காலத்தில் இக்குடும்பத்தைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது பக்தி கொண்டிருந்தார். மகாகணபதி சன்னதியில் அமர்ந்து கிருஷ்ணனின் பெருமைகளை விவரிக்கும் பாகவதத்தை தினமும் படித்தார். இவரது பக்திக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணர், மருமகனான மகாகணபதியின் மடியில் அமர்ந்து காட்சியளித்தார். அப்போது மகாகணபதியும் தன் துதிக்கையால் கிருஷ்ணரை அணைத்து மகிழ்ந்தார். ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கிருஷ்ணரை மகிழ்விக்கும் இசைத் திருவிழா நடக்கும். பிரபல பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர். பிரகாரத்தில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்கை, அந்தி மகாகாவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. திருமணத்தடை விலக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பழமாலை வழிபாடு நடக்கிறது. குழந்தை பாக்கியத்திற்காக சுவாமிக்கு பால்பாயாசம் படைக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கிரக தோஷத்தில் இருந்து விடுபட முக்குற்றி புஷ்பாஞ்சலி என்னும் வழிபாடு செய்கின்றனர். முக்குற்றி என்னும் மூலிகைச் செடிகள் நுாற்றி எட்டை வேருடன் பறித்து விநாயகரின் மூலமந்திரம் ஓதி வழிபடுகின்றனர். ஒரு நாளைக்கு ஐந்து முறை மட்டுமே இந்த வழிபாடு நடப்பதால் முன்பதிவு செய்வது அவசியம். எப்படி செல்வது: கோட்டயத்திலிருந்து 23 கி.மீ., விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04829 - 243 455, 243 319, 94471 14345அருகிலுள்ள தலம்: கடுத்துருத்தி சிவன் கோயில் 19 கி.மீ.,நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி தொடர்புக்கு: 093874 - 84685